/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1154.jpg)
கோவை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் அட்டகாசம் செய்துவரும் காட்டு யானையான பாகுபலியைப் பிடிக்க வேண்டுமென வனத்துறையினர் முடிவுசெய்தனர். அதற்காக, டாப்சிலிப்பிலிருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஸ் என்ற 3 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு, மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கில் நிறுத்திவைத்தனர்.
அந்தக் கும்கி யானைகள் உதவியுடன் பாகுபலியைப் பிடித்து அதன் தலையில் ஜி.பி.எஸ். ரேடியோ காலர் பொருத்தி, நடவடிக்கையைக் கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்திருந்தனர். இதனிடையே மண்டல தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் உத்தரவின் பேரில், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் அறிவுறுத்தலின்படி,ஒரு வனவர், 5 வனக்காவலர்கள் அடங்கிய 7 தனிக்குழுக்கள் மற்றும் வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையிலான 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், வனக்குழுவினருக்கு நேற்று (28.06.2021) பாகுபலி, மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வேடர் காலனி பகுதியில் சுற்றித்திரிவதாக செய்திவந்தது. உடனே வனத்துறையினர் அப்பகுதிக்குவிரைந்து சென்றதையடுத்து பாகுபலியானை தனது பாதையினை மாற்றி வனத்துறையினருக்குப் போக்கு காட்டியது. இருப்பினும் யானையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
2வது நாளாக இன்றும்பாகுபலியை தேடும் பணியில் வனத்துறையினர் மற்றும் மருத்துவத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் பாகுபலி மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகங்கள் என அடிக்கடி தனது இடத்தை மாற்றிக்கொண்டிருப்பதால் யானையைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து ‘பாகுபலி ஆபரேஷன்’ தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், “பாகுபலி யானை கடந்த 5 நாட்களாக வனப்பகுதியைவிட்டு வெளியே வரவில்லை. நேற்று வேடர் காலனி அருகில் வந்தது குறித்து அறிந்து அங்கு சென்றபோதும் யானை வன எல்லையைவிட்டு வெளியில் வரவில்லை.
இந்தநிலையில், 2வது நாளாக இன்றும் மருத்துவக் குழுவினரும் வனக்குழுவினரும் தொடர்ந்து கண்காணித்துவந்த நிலையில் மனிதர்களுடைய நடமாட்டத்தை அறிந்துகொண்டு மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குள் இருந்து சிறுமுகை வனப்பகுதிக்குள் என அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொள்வதால், அதனைக் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைக்கும் பணியில் ஈடுபட்ட வனக்குழுவினரையும் தாக்கவும் முற்பட்டுள்ளது.
இதனால் பாகுபலியினை மேலும் துன்பப்படுத்தாமல் இருப்பதற்காக அடுத்த 10 நாட்கள் தீவிர கண்காணிப்புக்குப் பின்னர் ‘ஆபரேஷன் பாகுபலி’ மீண்டும் தொடரும். இந்த 10 நாட்களும் கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கிலேயே நிறுத்திவைக்கப்படும்” என தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)