Skip to main content

செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரியில் நீர் திறப்பு

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

Opening of water in Sembarambakkam, Bundi, Puzhal lake

 

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்தது. தற்போதைய நிலவரப்படி தீவிரப்புயலாக இருந்த 'மாண்டஸ்' புயலாக வலுவிழந்து நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து தென்கிழக்கில் 220 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

 

சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு மக்கள் வருவதை தவிர்க்கும்படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்களின் அருகில் இருக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், தொடர்மழை காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து முதற்கட்டமாக 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது ஏரியின் நீர்மட்டம் 20.37 அடியாக உள்ளது. இதனால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் புழல் ஏரியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100  கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏரியில் குளிக்க முயன்ற 4 பெண்கள் உயிரிழப்பு

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
4 women lose their live while trying to bathe in the lake

கோவிலுக்குச் சென்ற நான்கு பெண்கள் ஏரியில் குளிக்கும் முற்பட்ட போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா என்பவர் அவருடைய மகள் லலிதா மற்றும் கல்லூரி மாணவி காவியா அவருடைய தங்கை ப்ரீத்தா ஆகியாருடன் சேர்ந்து வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலுக்கு சென்று வழிபாட்டை முடித்த அவர்கள் கோவிலுக்கு அருகிலேயே உள்ள வேப்பூர் ஏரியை சுற்றி பார்த்துள்ளனர்.

பின்னர் குளிப்பதற்காக ஏரியில் நான்கு பேரும் இறங்கியுள்ளனர். அப்பொழுது நால்வரில் ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று விட, அவரை மீட்க மற்ற மூன்று பேரும் முயன்றுள்ளனர். இதில் நான்கு பேரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். நீரில் சிலர் தத்தளிப்பது அந்த பகுதி மக்களுக்கு தெரிய வர, உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் நால்வரும் உயிரிழந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா ஆகிய நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வீராணம் ஏரியில் நச்சுக்கலப்பா? அதிகாரிகள் விளக்கம்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Officials have explained that there is no bad liquid in Veeranam Lake

கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி கடந்த 10-ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த ஏரியில் இருந்து சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, திருமுட்டம் வட்டப்பகுதிகளில் 47 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 

அதே நேரத்தில் சென்னைக்கு குடிநீர் வழங்கி வருகிறது. இந்த ஏரியில் நச்சு கலந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பிரசிடென்சி கல்லூரி ஆய்வாளர்கள் கடந்த 2018-19 ஆண்டில் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  மேலும் ஒரு லிட்டர் குடிநீரில் 1 மைக்ரோ கிராமுக்கு மேல் நச்சுகள் இருக்க கூடாது என உலக சுகாதார மையம் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது என்றும், ஆனால் வீராணம் ஏரியில் 1 லிட்டர் நீரில் 17.72 மைக்ரோகிராம் முதல் 19.38 கிராம் வரை நச்சுகள் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபனிடம் கேட்டபோது, “வீராணம் ஏரியை சுற்றி எந்த ஒரு தொழிற்சாலையும் இல்லை, நச்சுகழிவுகள் கலக்க வாய்ப்பில்லை. இவர்கள் தண்ணீர் மிகவும் குறைந்த நேரத்தில் எடுத்துள்ளார்களா? என்று தெரியவில்லை. தற்போது வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் நல்ல முறையில் உள்ளது. இதனை விவசாயத்திற்கு அளித்து வருகிறோம். தண்ணீர் குறித்த ஆய்வை நாங்கள் மேற்கொள்ள முடியாது” என்றார்.

இந்த தகவல் குறித்து சென்னை மெட்ரோ வாட்டர் செயற்பொறியாளர் ராம்ஜியிடம் கேட்டபோது, “ஒவ்வொரு முறையும் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும்போது தண்ணீரை பலமுறைகளில் சுத்திகரித்து அனுப்பி வருகிறோம். வீராணம் ஏரியில் எந்த ஒரு நச்சும் இல்லை. எனவே தண்ணீரை சோதனை செய்து தான் எடுக்கிறோம்” என்றார்.

அதேபோல் கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் உதவிப்பொறியாளர் அனந்தராயன் கூறுகையில், “வீராணம் ஏரியை சுற்றி எந்த நச்சு கழிவுகள் கலக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே இந்த தகவல் வெளிவந்த பிறகு பொதுமக்களுக்கு அச்சத்தை தீர்க்கும் வகையில் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரை சாம்பிளுக்கு எடுத்துச் சென்று ஆய்வகத்தில் கொடுத்துள்ளோம். ஆய்வகத்தில் இருந்து ரிசல்ட் வந்தவுடன் இதுகுறித்து முழுத்தகவலும் வெளியிடப்படும்” என்றார்.

வீராணம் ஏரியில் நச்சு உள்ளது என்ற தகவல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனை விரைவில் மாவட்ட நிர்வாகம் கலைய செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.