Advertisment

வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

Opening of water for irrigation from Veeranam Lake!

மேட்டூர் அணையில் இருந்து கடந்த மே மாதம் 24 ஆம் தேதி தமிழக முதல்வர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார். இந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணையை வந்தடைந்தது. கீழணையில் இருந்து வடவாறு மூலம் வீராணம் ஏரியில் தண்ணீர் படிப்படியாக தேக்கி வைக்கப்பட்டது. இதனால் வீராணம் ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது. இது 1,465 மில்லியன் கனஅடி ஆகும். இதனைத் தொடர்ந்து இன்றுதிங்கள் கிழமை மாலை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாசனத்திற்காக ராதா மதகு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டார். வீராணம் ஏரியில் உள்ள 34 மதகுகள் வழியாகவும், பிரதான வாய்க்கால்களில் வினாடிக்கு 45 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Advertisment

இதன் மூலம் 44,856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். வீராணம் ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் ஏரியைச் சுற்றியுள்ள நத்தமலை, கந்தகுமாரன், உத்தமசோழன், முகையூர் மற்றும் சேதியூர் உள்ளிட்ட 102 கிராமங்களில் சம்பா சாகுபடி செய்ய பயன்படுவதுடன், நிலத்தடி நீர் உயரும்.

Advertisment

வீரணம் ஏரியிலிருந்து சென்னைக்கு நாள்தோறும் 72 கனஅடி குடிநீருக்கு வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக கீழணையிலிருந்து பாசனத்திற்கு வடவாறு வாய்க்கால் வழியாக வினாடிக்கு 2,200 கன அடியும், வடக்கு ராஜன் வாய்க்கால் மூலம் 750 கன அடி, தெற்கு ராஜன் வாய்க்கால் ,மூலம் 650 கன அடி, கும்கி மன்னியாறு மூலம் 150 கனஅடி, மேலராமன் வாய்க்கால் வழியாக 25 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் கடலூர் தஞ்சை, அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 1,31,903 ஏக்கர் பாசனம் பெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு கிருஷ்ணன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ சிந்தனைச் செல்வன், மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் அணைக்கரை குமார், சிதம்பரம் ஞானசேகர், ராதா வாய்க்கால் பாசன சங்கத் தலைவர் ரங்கநாயகி, கடலூர் மாவட்ட உழவர் மன்ற கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட பாசன சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Lake veeranam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe