Skip to main content

பள்ளிகள் திறப்பு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

opening of schools; Important announcement

 

தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டுக்காக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவிருந்தன. அதே சமயம், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். 

 

இதனைத் தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் வகுப்பறைகளில் அமர்வது கடும் சிரமம் என்று 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார். 

 

தொடர்ந்து வெயிலின் தாக்கம் குறையாததால் அமைச்சர் அன்பில் மகேஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட உத்தரவில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் 3 நாட்கள் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று தொடங்கி வரும் 11 ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு என 3 தினங்கள் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கூடுதலாக பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற ஊர்களில் இருந்து சென்னை வருவதற்கு 650 பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி போன்ற இடங்களுக்கு 850 பேருந்துகள் என மொத்தம் 1500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திறக்கப்பட்ட பள்ளிகள்; மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்த ஆசிரியர்கள்

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

Schools opened; The teachers took aarti to the students

 

கோடை விடுமுறை முடிந்து ஈரோட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 

 

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. இதனை அடுத்து மாணவர்கள் கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கும் உறவினர்கள் வீடுகளுக்கும் சென்றனர். கோடை விடுமுறை முடிந்தபின் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. 

 

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் முடிந்த பின்னும் தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்ததால் பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி பள்ளிகள் திறக்கும் நாள் ஜூன் 7-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறையாமல் வறுத்தெடுத்து வந்ததால் பள்ளி திறப்பை மீண்டும் தள்ளிப்போட வேண்டும் என பெற்றோர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

 

பள்ளி திறப்பை ஒட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள முக்கியக் கடைவீதிகளில் பெற்றோர்கள் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக அதிகமாக இருந்தது. நோட்டு, புத்தகம், ஷூ, சாக்ஸ் போன்ற கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேநேரம் பள்ளி திறப்பை ஒட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அந்தந்த பள்ளிகளில் தூய்மை பணிகள் நடந்து வந்தன. பள்ளி வளாகம், வகுப்பறைகள் தூய்மைப்படுத்தப்பட்டன. பள்ளி திறப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று காலை 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

 

மாணவர்களை வரவேற்கும் விதமாக ஈரோடு எஸ்.கே.சி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று காலை புதிதாக பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சார்பில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சுமதி தலைமையில் ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்று அவர்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுழைவாயிலில் அலங்கார வளைவு அமைத்து சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளிக்கு புதிதாக வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். இதேபோல் இன்னும் சில பள்ளிகளில் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு பள்ளிகளுக்கு புதிதாக வந்த மாணவர்களுக்கு ரோஜாப்பூ மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் புதிய நண்பர்கள், புதிய சூழல் என மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். 

 

இதேபோல் யுகேஜி மாணவர்களுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒன்றரை மாத விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் சில மாணவ, மாணவிகள் அழுது கொண்டே பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்குள் நுழைந்ததும் தாய், தந்தையை கட்டி அரவணைத்து பள்ளிக்கு செல்ல மாட்டோம் என்று அழுது அடம் பிடித்தனர். அவர்களை ஆசிரியர்கள் சமாதானப்படுத்தி வகுப்பறைக்குள் அழைத்து சென்றனர்.

 

ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் 8,093 மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கும் திட்டத்தில் உணவு வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டம் ஈரோடு மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் செயலில் இருந்து வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்த பிறகு இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளான இன்று பொங்கல், சாம்பார் வழங்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் 59 பள்ளிகளில் 8,238 மாணவர்களும், தாளவாடி மலைப்பகுதியில் 38 பள்ளிகளில் 665 மாணவர்கள் என 97 பள்ளிகளை சேர்ந்த 8903 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

 

 

 

Next Story

முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்; திண்டுக்கல்லில் பரபரப்பு

Published on 13/06/2023 | Edited on 14/06/2023

 

Students besieged the Principal Education Office; The excitement in Dindigul

 

திண்டுக்கல் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

 

பள்ளிக் கட்டடம் பழுதடைந்து இருந்ததால் நடப்பு கல்வி ஆண்டில் புதிய பள்ளிக் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி எம்.வி.எம் கல்லூரி பின்புறம் உள்ள வசந்தம் நகரில் கட்டடம் கட்டப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நேற்று ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில், மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த பள்ளி நடப்பு கல்வி ஆண்டு முதல் வசந்தம் நகரில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

 

ஆனால் பள்ளிக்கு சென்று வர போதிய பேருந்து வசதி இல்லை. அதனால் திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி மாணவர்கள் கூறுகையில், “பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் தங்களுக்கு மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பள்ளியே அருகில் உள்ளது. அதனால் அந்த பள்ளி கட்டடத்தை சீரமைத்து அதே இடத்தில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லை என்றால் நாங்கள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணிப்பு செய்வோம்” என தெரிவித்தனர். 

 

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் நலன் கருதி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் ஒருபுறம் கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.