Skip to main content

திறக்கப்பட்டது 'ஜெயலலிதா நினைவு இல்லம்' - முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு! (படங்கள்)

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' அரசுடைமையாக்கப்பட்ட நிலையில், இன்று (28.01.2021) திறக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், தற்பொழுது வேதா இல்லத்திற்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

 

அதன்பின் போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தை 10.51 மணிக்கு  துணைமுதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி இல்லத்தை திறந்துவைத்தார். அதேபோல் வீட்டின் உள்ளே இருந்த குத்து விளக்கை முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஏற்றிவைத்தனர்.

 

 Opened 'Veda Nilayam' - Chief Minister, Deputy Chief Minister, Ministers participate!

 

40 ஆண்டுகள் ஜெயலலிதா இங்கிருந்துதான், நாடாளுமன்ற உறுப்பினர், முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினர், அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர், தொடர்ச்சியாக 6 முறை முதல்வர் ஆகிய பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் அதிமுகவின் அதிகார மையமாகவும் இந்த 'வேதா நிலையம்' செயல்பட்டது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது உலகளவிலான அரசியல் தலைவர்களும் வந்து சென்ற இடமாக ‘வேதா நிலையம்’ இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், 2017 பிப்ரவரிக்குப் பின்னர், இந்த இல்லம் மூடப்பட்டது. 

 

அரசுடமை ஆக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது. வீட்டின் வெளியில் ‘ஜெயலலிதா நினைவு இல்லம்’ என்ற பலகை வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி கட்சி தொண்டர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் உயர்நீதிமன்ற தடையால் வேதா இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட முடியாது. ஜெ.தீபா, ஜெ.தீபக் தொடர்ந்த வழக்கின் விசாரணை முடியும் வரை பொதுமக்கள் வேதா நிலையத்தை பார்வையிட அனுமதியில்லை.

 

இந்த வழக்கில், நிகழ்ச்சி முடிந்த பிறகு சாவியை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக எந்த பேனர்களும் வைக்கக்கூடாது. அதேபோல் தீபா, தீபக் முன்னிலையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கணக்கெடுக்க வேண்டியுள்ளது. எனவே வேதா நிலையத்தில் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.