பயணங்களின் போது கண்ணில்படும் சில விஷயங்கள் நமக்குள் ஏதோ ஒன்றைத் தோற்றுவிக்கும். அதையெல்லாம் மனதுக்குள் வைத்துக்கொள்வோமே தவிர, யாரிடமும் வெளிப்படுத்துவதில்லை. ஏனென்றால், இதை வெளியில் சொன்னால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற தயக்கம்தான்!
பார்த்தவுடன் மனதில் தோன்றிய சில விஷயங்களை இங்கே பகிர்கிறோம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/yaar karnan.jpg)
கர்ணனைப் பெற்ற காவிய தாய் என்ற வாசகம் இடம்பெற்ற அந்த நினைவஞ்சலி போஸ்டரில் ஒருவர், தன் தாயை வணங்கிக் கொண்டிருந்தார். அமைச்சர் செல்லூர் ராஜுவின் பெயரும் இருந்தது. அந்தத் தாயின் மகன் பெயர் நிச்சயமாக கர்ணன் இல்லை. ஆனாலும், தன் பெயரைக்கூட குறிப்பிடாமல், நினைவஞ்சலி போஸ்டரிலும் விளம்பரம் தேடிக்கொண்டிருந்தார், அந்த மகன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kadavul VIJAY.jpg)
முன்னொரு காலத்தில் ’நான் கடவுள் தத்துவம்’ பரவலாக இருந்ததாம். தத்வமஸி சொல்கிறது. இங்கே, ‘நாங்கள் வணங்கும் ஒரே கடவுள் தளபதி விஜய்’ என, ஒட்டுமொத்த அவரது ரசிகர்களின் சார்பில், சுவரில் விளம்பரம் செய்திருக்கிறார், ஒருவர். ‘கட உள்’ என்பதே கடவுள் எனச் சொல்லப்படுவதை அவர் அறிந்திருக்கவில்லை போலும். தனக்குள்ளே கடந்து, தானும் ஒரு கடவுள் என்பதை, இவரைப் போன்ற ரசிகர்கள் எப்போது உணரப் போகிறார்களோ?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/makkal kuralaam rajini.jpg)
இது நன்றி தெரிவிக்கும் போஸ்டர். இறை நம்பிக்கையையும், மத நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி பேசுபவர்கள், பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறார்கள் என்றும், மனதில் பட்டதை மக்கள் குரலாய் ஒலிக்கிறார் ரஜினிகாந்த் என்றும் அவரைப் போற்றுகிறது, ஒரு தனியார் நிறுவனம். எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் லோகோ ஒன்றையும் சின்னதாக அந்தப் போஸ்டரில் இடம்பெறச் செய்துள்ளனர். ரஜினியின் பேச்சுக்கு எதிராக விமர்சனங்கள் சீறிவரும் நிலையில், இதுபோன்ற போஸ்டர்கள், அரசியல் எதிர்பார்ப்பில் உள்ள அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் தெம்பளிக்கும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thagaval palagai.jpg)
‘தகரம் கண்டுபிடிக்கும் முன்பே உண்டியலைக் கண்டுபிடித்தவர்கள் கம்யூனிஸ்டுகள்..’ என்று சட்டமன்றத்தில் கேலி பேசி, அதனைப் பதிவும் செய்த தலைவர் அமரராகிவிட்டார். ஆனால், தோழர்கள் கேலி, கிண்டலுக்கு உரியவர்கள் அல்ல. ‘அதற்கும் மேலானவர்கள்!’ என்று சொல்லக்கூடிய அளவில் சமூக சிந்தனையோடு செயல்படக்கூடியவர்கள். இன்றும்கூட, ‘ஊதுற சங்கை ஊதுவோம்’ என, அன்றன்றைய விஷயங்களைத் தகவல் பலகையில் எழுதி மக்களோடு பகிர்ந்து வருகின்றனர். 1948-ல் காந்தியைக் கொலை செய்ய முயன்று முடியாமல் போன முக்கிய குற்றவாளி மதன்லால் பாவா குறித்தெல்லாம் விவரிக்கும் அந்தப் பலகை, நிகழ்கால அரசியலும் பேசியது.
நம்மில் ஒவ்வொருவருக்கும் ‘காட்சி’ வாயிலாக இந்த உலகம் ஏதேதோ உணர்த்தியபடியேதான் இருக்கிறது.
  
 Follow Us