Skip to main content

விழிகளை விரியுங்கள்! உலகத்தை உணருங்கள்!

Published on 02/02/2020 | Edited on 02/02/2020

பயணங்களின் போது  கண்ணில்படும் சில விஷயங்கள் நமக்குள் ஏதோ ஒன்றைத் தோற்றுவிக்கும். அதையெல்லாம் மனதுக்குள் வைத்துக்கொள்வோமே தவிர, யாரிடமும் வெளிப்படுத்துவதில்லை. ஏனென்றால், இதை வெளியில் சொன்னால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற தயக்கம்தான்!

பார்த்தவுடன்  மனதில் தோன்றிய சில விஷயங்களை இங்கே பகிர்கிறோம்.

 

open the vision;Feel the world!


கர்ணனைப் பெற்ற காவிய தாய் என்ற வாசகம் இடம்பெற்ற அந்த நினைவஞ்சலி போஸ்டரில் ஒருவர், தன் தாயை வணங்கிக் கொண்டிருந்தார். அமைச்சர் செல்லூர் ராஜுவின் பெயரும் இருந்தது. அந்தத் தாயின் மகன் பெயர் நிச்சயமாக கர்ணன் இல்லை. ஆனாலும், தன் பெயரைக்கூட குறிப்பிடாமல், நினைவஞ்சலி போஸ்டரிலும் விளம்பரம் தேடிக்கொண்டிருந்தார், அந்த மகன்.  

 

open the vision;Feel the world!


முன்னொரு காலத்தில் ’நான் கடவுள் தத்துவம்’ பரவலாக இருந்ததாம். தத்வமஸி சொல்கிறது. இங்கே, ‘நாங்கள் வணங்கும் ஒரே கடவுள் தளபதி விஜய்’ என, ஒட்டுமொத்த அவரது ரசிகர்களின் சார்பில், சுவரில் விளம்பரம் செய்திருக்கிறார், ஒருவர்.  ‘கட உள்’ என்பதே கடவுள் எனச் சொல்லப்படுவதை  அவர் அறிந்திருக்கவில்லை போலும்.  தனக்குள்ளே கடந்து, தானும் ஒரு கடவுள் என்பதை, இவரைப் போன்ற ரசிகர்கள் எப்போது உணரப் போகிறார்களோ?  

 

open the vision;Feel the world!

 

இது நன்றி தெரிவிக்கும் போஸ்டர். இறை நம்பிக்கையையும், மத நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி பேசுபவர்கள், பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறார்கள் என்றும், மனதில் பட்டதை மக்கள் குரலாய் ஒலிக்கிறார் ரஜினிகாந்த் என்றும் அவரைப் போற்றுகிறது, ஒரு தனியார் நிறுவனம். எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் லோகோ ஒன்றையும் சின்னதாக அந்தப் போஸ்டரில் இடம்பெறச் செய்துள்ளனர். ரஜினியின் பேச்சுக்கு எதிராக விமர்சனங்கள் சீறிவரும் நிலையில், இதுபோன்ற போஸ்டர்கள், அரசியல் எதிர்பார்ப்பில் உள்ள அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் தெம்பளிக்கும்.

 

open the vision;Feel the world!


‘தகரம் கண்டுபிடிக்கும் முன்பே உண்டியலைக் கண்டுபிடித்தவர்கள் கம்யூனிஸ்டுகள்..’ என்று சட்டமன்றத்தில் கேலி பேசி, அதனைப் பதிவும் செய்த தலைவர் அமரராகிவிட்டார். ஆனால்,  தோழர்கள் கேலி, கிண்டலுக்கு உரியவர்கள் அல்ல.  ‘அதற்கும் மேலானவர்கள்!’ என்று சொல்லக்கூடிய அளவில் சமூக சிந்தனையோடு செயல்படக்கூடியவர்கள். இன்றும்கூட,  ‘ஊதுற சங்கை ஊதுவோம்’ என, அன்றன்றைய விஷயங்களைத் தகவல் பலகையில் எழுதி மக்களோடு பகிர்ந்து வருகின்றனர். 1948-ல் காந்தியைக் கொலை செய்ய முயன்று முடியாமல் போன முக்கிய குற்றவாளி மதன்லால் பாவா குறித்தெல்லாம் விவரிக்கும் அந்தப் பலகை, நிகழ்கால அரசியலும் பேசியது.  

நம்மில் ஒவ்வொருவருக்கும் ‘காட்சி’ வாயிலாக இந்த உலகம் ஏதேதோ உணர்த்தியபடியேதான் இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதற்கு பா.ஜ.க வெட்கப்பட வேண்டும்” - ஜெயக்குமார் ஆவேசம்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Jeyakumar raves on BJP should be ashamed of this

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வந்திருந்த பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

அந்த வகையில் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “கடந்த 1991இல் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையில் காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றினோம். நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது” என்று பேசினார். 

இதற்கிடையே, பா.ஜ.க லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுடன் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி அ.திமு.கவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பா.ஜ.கவினரின் செயலுக்கு புதுச்சேரி அ.தி.மு.க பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பா.ஜ.க பயன்படுத்த வெட்கப்பட வேண்டும். எதற்காக இப்படி எங்கள் தலைவர்கள் படங்களை பயன்படுத்துகிறீர்கள்?. அதிமுக தலைவர்களை முன்னிலைப்படுத்தி, பா.ஜ.க வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது. தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்று இதன்மூலம் தெரிகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முகங்களைக் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது. அந்த இரண்டு முகங்களும் அதிமுகவுக்கு மட்டுமே சொந்தமானது” என்று கூறினார். 

Next Story

போராடினால் 20,000 ரூபாய் அபராதம்; பல்கலைக்கழகத்தின் அறிவிப்பிற்கு மாணவர்கள் எதிர்ப்பு 

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
20,000 rupees fine for fighting; Students protest against the university's announcement

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) அவ்வப்போது மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இதற்கு முன்பு அங்கு ஏற்பட்ட மாணவர்கள் போராட்டம் பலமுறை கலவரத்திலும் முடிந்திருக்கிறது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் போராடினால் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக ஜேஎன்யூ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடங்களுக்கு 100 மீட்டருக்குள் மாணவர்கள் தர்ணா அல்லது சுவரொட்டிகளை ஒட்டினால் 20,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தேச விரோத செயலில் மாணவர்கள் ஈடுபட்டால் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். வகுப்புவாத, சமூக மோதல் அல்லது தேச விரோத கருத்துக்களைக் கொண்ட சுவரொட்டிகள் அல்லது துண்டு பிரசுரங்களை பல்கலைக்கழகத்தில் ஒட்டுவதற்கு அனுமதி இல்லை.

உண்ணாவிரதம், தர்ணாவில் ஈடுபடும் மாணவருக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள். விடுதியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். படிக்கும் காலத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனைகள் பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து முழுவதுமாக வெளியேற்றப்படுவர். மாணவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை விவரம் குறித்த நகல் பெற்றோர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் மற்றும் இணையத்திலும் பதிவேற்றப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் கருத்துரிமையை நொறுக்கும் வகையில் புதிய வழிமுறைகளை வகுத்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.