Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத்தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Advertisment

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.