
செஞ்சிப் பகுதியில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று மக்கள் கூறிவந்த நிலையில் ஊர்க்காவல்படையில் பணியாற்றும் ஒருவரே மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களிடம் கையூட்டுப் பெற்று அவர்களை அனுமதித்துள்ளது தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது மேல்சித்தாமூர். இந்த ஊர் அருகே உள்ள தொண்டி ஆற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருகிறது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் செயல்பட்டு வரும் தனிப்படை காவலர்கள் செஞ்சிபகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இரவு நேரங்களில் தொண்டி ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிச் செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தனிப்படைக் காவலர்கள் இரவு நேரத்தில் தொண்டி ஆற்றுக்குச் சென்றுள்ளனர். அங்கே 8 மாட்டு வண்டிகளில் மணல்ஏற்றிக்கொண்டிருந்தனர். அந்த 8 மாட்டு வண்டிகளையும்பறிமுதல் செய்ததோடு வண்டிகளின் உரிமையாளர்கள் 8 பேர்களையும் காவலர்கள் கைது செய்து செஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மணல் அள்ளுவதற்கு உடந்தையாக இருந்ததாக அதே பகுதியைச் சேர்ந்த ஊர்க்காவல் படையில் பணியாற்றும்வின்சென்ட் ராஜ் என்பவரையும் கைது செய்துள்ளனர். காவல்துறையைச்சேர்ந்தவர் போலபாவனைசெய்ததோடு ஊர்க்காவல் படை மூலம் காவல்துறையுடன்உள்ள தொடர்பைப் பயன்படுத்தி வின்சன்ட் ராஜ் தொண்டி ஆற்றில் மணல் அள்ளும் மாட்டு வண்டிகளுக்குத் தலா 500 ரூபாய் வீதம் வசூல் செய்து மணல் அள்ளுவதற்கு அனுமதி அளித்து வந்துள்ளார்.
ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர் மணல் அள்ளுவதற்குப் பணம் வசூலித்த தகவல் வெளியே தெரிந்தால் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று செஞ்சி காவல்துறையினர் வின்சென்ட் ராஜ் மீது 15 லிட்டர் எரிசாராயம் வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Follow Us