Skip to main content

சி.ஏ.ஏ தேவை இல்லை என்று தீர்மானம் கொண்டு வந்தால் தான், போராடும்  பெண்கள் வீடு திரும்புவார்கள். -குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் முழக்கம்

தென் பாண்டி மண்டலத்தின் பரணிபாயும், பாளையங்கோட்டை. இதன் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் பல விசித்திரங்கள் தான் காணப்படும்.

வியாபாரியாக வந்த வெள்ளைக்காரனை எதிர்த்து வரி கொடுக்கமாட்டேன் என்று சுதந்திரத்திற்காக முதல் முழக்கமிட்ட மாமன்னன் பூலித்தேவன். பொருட்களை வாங்கவும் விற்கவும் வந்த உனக்குக் கிஸ்தியா. விடுதலைத் தன்மானப் போராட்டத்தில் தூக்கில் தொங்க விடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன். தன் ஒற்றை வரியால் நாடி நரம்பு, ரத்தங்களை விடைக்க வைக்கும் மகாகவி சுப்பிரமணிய பாரதி. செக்கிழுத்தே மாண்டுபோன வ.உ.சி. தேசம் சுதந்திரம் அடைய ஏகாதிபத்தியத்துடன் சமர்புரிந்த இந்த வீர புருஷர்களைக் கொண்டது பாளையங்கோட்டை.

 

palayamkottai


இப்படி போர்குணம் கொண்ட பாளையில் மார்ச் 7 அன்று உலமா சபை மக்கள் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நடத்திய குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் ஆண்கள் பெண்கள் என்று ஆயிரக்கணக்கில் திரண்ட முஸ்லீம் மக்களுடன் பங்கேற்ற கிறிஸ்தவ மத குருக்கள், பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும், இது குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான இரண்டாவது விடுதலைப் போர் என்று போர் முரசைக் கொட்டியிருக்கிறார்கள். குடியுரிமைச் சட்டத்திற்கெதிரான போராட்டம் உக்கிரமடையத் தொடங்கியிருக்கிறது.

இந்த மாநாட்டில் பலர் பேசினாலும் குறிப்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களின் உரை வீச்சுத்தான் அனலாக தகித்தது.

சி.பி.ஐ.யின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரான தோழர் லெனின் பேச்சில், காரம் தெறித்தது. 1949 லேயே குடியுரிமைச் சட்டம் வந்து விட்டது. அகதிகள் என்றால் அதில் இந்து கிறிஸ்தவர், முஸ்லிம் உண்டு. அனைவரும் ஒன்று. அவர்களை இனம், மொழி, சாதி ரீதியாகப் பார்க்கக்கூடாது. அகதிகளாகவே பார்க்க வேண்டும். அவர்களை விரட்டக் கூடாது. இதுதான் ஐ.நா உருவாக்கிய அகதிகளின் சட்டம் இப்போது அவர்களை இரண்டாம் தர மக்களாகப் பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான். வங்கதேசம் இந்த மூன்றும் எதிரி நாடு். ஆனால் வங்க தேசத்தை இந்திரா காந்திதான் உருவாக்கிக் காத்தார். ராமரைப் போன்று இந்து மதம் போதித்த சகிப்புத் தன்மைக்கு எதிராக நடக்கிறீர்கள். ஆப்கானிஸ்தானுக்கு பல கோடி செலவில் இந்தியா பாராளுமன்றம் அமைத்துக் கொடுத்தது அதற்கு அடல் (அடல் பிகாரி வாஜ்பாய்) பாராளுமன்றம் என்று பெயர் வைத்தது. ஆனால் ஆப்கானிஸ்தானை எதிரி நாடு பட்டியலில் வைத்துள்ளார்கள். என்றார் உக்கிரமாக.

கடையநல்லூரின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் எம்.எல்.ஏ.வான முகம்மது அபுபக்கரோ,

முஸ்லிம்கள் அதிகம் வாழும் காஷ்மீரின் தனித்தன்மை பறிக்கப்பட்டு மாநில அமைச்சர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது சர்வாதிகாரப் போக்கு இப்படித்தான் பரிவரர் அமைப்புகளின் மீதமுள்ள நான்கு வருட ஆட்சியும் இருக்கும். சி.ஏ.ஏ. மூலமாக இஸ்லாமியர்கள் ஒதுக்கிவைக்கப்பட்டார்கள். இதுபோல இந்து பிற சமுதாய மக்கள் ஒதுக்கப்பட்டு, உயர்ஜாதி சமூகத்தவர்களே ஆளும் நிலை உருவாகும் என்றார் அழுத்தமாக.

சி.பி.எம்.மின் மத்தியகுழு உறுப்பினரான உ.வாசுகியோ.

 

palayamkottai


இது தாமிரபரணி நதிக்கரை. இந்த நதிக்கரையில்தான் நாகரீகம் பிறந்தது. ஆகப் பெரிய இந்திய அரசியல் சாசனம் சிதைக்கப்படுகிறது. இந்த சட்டத்தை நாம் கடந்து விட்டால் அடுத்து அவர்கள் நம்மை எதுவும் செய்ய முடியாது. நாங்கள் காந்தியின் மூன்று குரங்குப் பொம்மைகளைப் போன்று இருக்கமாட்டோம். அதாவது எங்களை நினைக்காதீர்கள். பார்க்காதீர்கள். எங்களை விமர்சிக்காதீர்கள் என பா.ஜ.க.வின் தன்மையைப் பற்றி புது விளக்கம் கொடுத்த வாசுகி, பி.ஜே.பியும், ஆர்.எஸ்.எஸ்.சும் தலைகீழாக நின்றாலும் இந்தியாவை மாற்றிவிட முடியாது. என்ற போது, பெண்கள் பகுதியில் பலத்த கைதட்டல்கள்.

ம.தி.மு.க.வின் மல்லை சத்யா சொன்னார். பாராளுமன்ற மண்டபத்தில், வைகோவின் கரத்தைப் பற்றிய மோடி, இந்தச் சட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும். என்று கேட்டார்.பெரியார்,அண்ணா, கலைஞர் காயிதேமில்லத் போன்ற பகுத்தறிவாளர்கள் பிறந்த மண்ணிலிருந்து வந்தவன் நான். ஒரு போதும் ஆதரவு தரமாட்டேன் உங்களுக்கு எதிராகக் களமாடுவேன் என்றார் தைரியமாக. இந்த சட்டத்தின் மூலம் இங்குள்ளவர்களை நாடோடிகளாக மாற்றப்படும் முயற்சிகள் தான் நடத்தப்படுகிறது. என்றார் நரம்புகள் விடைக்க.

புதுச்சேரி யூனியனின் முதல்வர் நாராயணசாமியின் பேச்சு அதிரடியாகவும் தூக்கலாகவுமிருந்தது.

 

palayamkottai


நாட்டின் சுதந்திரத்திற்காக கிறிஸ்தவர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., இந்தியாவை இந்து நாடாக்க முயற்சிக்கிறார்கள். இந்த நாட்டை மதசார்பற்ற நாடாக மாற்ற, சட்டத்தை இயற்றும் பொறுப்பை தாழ்த்தப்பட்ட டாக்டர் அம்பேத்கரிடம் ஒப்படைத்தார் நேரு. ஆனால், இந்திய நாட்டில், இந்துக்கள் தான் இருக்கவேண்டும் என்று ஆறு வருடமாகச் செயல்படுகிறது மோடி அரசு, அதுதான் சி.ஏ.ஏ. இதற்குத் துணை போகும் அ.தி.மு.க. வரலாற்றுப் பிழையைச் செய்திருக்கிறது. இல்லை என்றால் அதன் நாற்காலி, காலிதான்.

மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து எப்படி தீர்மானம் நிறைவேற்றலாம் என்று எனக்கு ரகசியமாகக் கடிதம் எழுதினார்கள். அதை நான் சட்டமன்றத்தில் வாசித்துவிட்டேன். மக்களைப் பாதிக்கும் சட்டத்தை நான் ஏற்கமாட்டேன் என்றேன். ஆட்சியைக் கலைத்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். மக்கள் நலம் தான் முக்கியம் என்றார் தரையதிர.

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரான ஜவாஹிருல்லாவோ.

 

palayamkottai

 

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான், வங்கதேசம் அங்கிருந்து வரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை என்றார்கள். அவர்கள் எத்தனை பேர் என்றால் கணக்கில்லை. அதில் தான் சூழ்ச்சியே இவைகளில் பூடான் நாடு பௌத்த மதம் கொண்டது. அதை ஏன் சேர்க்கவில்லை. அங்கே கிறிஸ்தவர்களுக்குக் கொடுமை நடக்கிறதே. ஆனால் அதைக் கண்டு கொள்ளவில்லை. சி.ஏ.ஏ. சட்டத்தால் இந்தியாவில், பல இந்திய மக்கள் குடியுரிமையை இழப்பார்கள் என்று ஐ.நா. சொல்லுகிறது. இப்போது மோடியும், அமித்ஷாவும் பின் வாங்குவதற்குக் காரணம், டிசம்19 அன்று டெல்லிக் கடுங்குளிரிலும், பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்தமர்ந்தார்களே அதுதான். என்.பி்.ஆர். என்.ஆர்.சி. தேவையில்லை என்று தீர்மானம் கொண்டு வந்தால் தான், போராடும் இந்தப் பெண்கள் வீடு திரும்புவார்கள். மக்களை ஏமாற்றி முடியாது என்ற போது கூட்டத்தில் ஆரவாரம்.

வி.சி.க.வின் திருமாவளவனின் உரைக்குக் கனத்த எதிர்பார்ப்பு.

 

palayamkottai


முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதுதான் மோடி, அமித்ஷாவின் திட்டம் அதனால்தான் முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்தக் குறிவைத்தார்கள். ஆனால் அவர்களுக்குத் துணையாக கிறிஸ்தவர்களும் போராட்டத்திற்கு வந்திருக்கிறார்கள். இது சி.ஏ.ஏ. சட்டத்தை நிறைவேற்றியவர்களுக்குத் தெரியாதா. இஸ்லாத்திற்கு மாற வேண்டுமானால் எல்லா கலாச்சாரத்தையும் விட்டு விட்டுத்தான் மாற வேண்டும். ஆனால் கிறிஸ்தவத்தில் சாதியாகவே மாறிவிடலாம். இஸ்லாத்தில் அப்படி இல்லை. அதனால் தான் அவர்களுக்கு கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பு. நாடு விடுதலையாகும் போது முஸ்லிம்கள் 9 சதவிகிதம். ஆனால் இன்று 14 சதவிகிதம். இந்துக்களின் மக்கட் தொகை குறைகிறது என்றார் அமித்ஷா. மக்களை மத ரீதியாகப் பிளவு படுத்த இவர்களுக்குக் கிடைத்த துருப்புச் சீட்டு இஸ்லாமியர்கள். ஆர்.எஸ்.எஸ். எதை நோக்கிப் பயணிக்கிறதோ, அதுதான் பா.ஜ.க.வின் பயணம். அது என்ன நினைக்கிறதோ அதைத்தான் செய்யும் பா.ஜ.க.

தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் இந்த சனாதனத்தை எதிர்க்க முடியும். ஆனால் எதிர்க்கட்சிகள் சேர மாட்டார்கள் என்று பா.ஜ.க. நினைக்கிறது.

இது முஸ்லிம்களை மட்டுமல்ல அனைத்துத் தரப்பு மக்களையும் குறிவைக்கும் திட்டம்.சட்டம். அதாவது, குடியுரிமை பெற்றவர்கள். குடியுரிமை சந்தேகப்பட்டவர்கள், அடுத்து குடியுரிமை அற்றவர்கள். என்று மூன்றாகப் பிரிக்கப்படுவார்கள்.

இது இரண்டாவது விடுதலைப் போர். என்ற முழக்கத்தோடு முடித்தார் திருமா. புள்ளியாக மையம் கொண்ட சி.ஏ.ஏ. எதிர்ப்பு விரிவடையத் தொடங்கியிருக்கிறது.

   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்