Skip to main content

"அம்மாவின் உண்மையான விசுவாசிக்கு தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்"- மாயத்தேவர் மகன் பேச்சு!

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

"Only a true believer of Amma will get the double leaf symbol"- Mayadevar son speech!

அ.தி.மு.க.வில் எம்.ஜி. ஆர், ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிக்கு தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று திண்டுக்கல் மாயத்தேவர் மகன் செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.

 

தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அ.தி.மு.க.வின் முதல் எம்.பி.யும், இரட்டை இலை சின்னத்தைத் தேர்வு செய்தவருமான திண்டுக்கல் கே.மாயத்தேவரின் (சின்னாளபட்டி) மகன் கே.எம்.செந்தில்குமரன் தலைமையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நூற்றுகணக்கானோர் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து ஐயா ஓ.பி.எஸ். வாழ்க, எம்.ஜி.ஆர். புகழ் ஓங்குக, புரட்சித்தலைவி புகழ் ஓங்குக என்று கோஷமிட்டவாறு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

 

அப்போது எம்.ஜி.ஆர். சிலை அருகே இருந்த எடப்பாடி படம் இருந்த பேனரை கிழித்து எரிந்தனர். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாயத்தேவர் மகன் செந்தில்குமரன், "உயர்நீதிமன்ற தீர்ப்பு தர்மம் வென்றுள்ளது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. எடப்பாடியைக் கொண்டு வந்த சின்னம்மா சசிகலா, அண்ணன் டிடிவி தினகரன், ஐயா ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டிவிட்டு அ.தி.மு.க. என்ற மாபெரும் கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி நினைத்தார். ஆனால் நீதி தேவதை நீதியை நிலைநாட்டுவது போல் வரலாறு காணாத தீர்ப்பை வழங்கி உள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு மூலம் விலகி இருந்தவர்கள் ஒன்று சேர்ந்து அ.தி.மு. க.வை பலம் பெற செய்வார்கள். எடப்பாடி பழனிசாமியின் துரோகத்திற்கும் முடிவு கட்டுவார்கள். அதுபோல் மீண்டும் ஓ.பி.எஸ். முதலமைச்சராக வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அவருக்கு கிடைத்த முதல் வெற்றி தொடரும்" என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

மகளிர் வாக்குகளை ஈர்க்கும் திமுக! தேர்தல் வியூக வகுப்பாளர்கள் கணிப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 Election strategists prediction on Clean sweep victory in the election

அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் முக்கியமான பகுதியினர் பெண்கள். அந்த வாக்கு வங்கியை இலக்காக வைத்து, தி.மு.க தொடர்ச்சியாக வேலை செய்து வருவது இந்தத் தேர்தலில் வெளிப்படையாகத் தெரிகின்றது. 2024 தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிய மூன்று முக்கியமான விஷயங்கள்,  மகளிர் உரிமைத் தொகை, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவை. இத்துடன் காலை உணவுத் திட்டம். இவை அனைத்தும் பெண் வாக்காளர்களின் மனங்களை ஒட்டுமொத்தமாக கவரும் நோக்கத்திலானவை என்பது வெளிப் படையான உண்மை !

முந்தைய தலைமுறைக்கு முன்னர் பெண்கள் படிப்பதும், படித்து முடித்து விட்டாலும் வேலைக்கு செல்வது என்பதும் அவ்வளவு எளிதானதாக இல்லை. இதனால் பாலின சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்கு கல்வியும், பொருளாதார விடுதலையும் முக்கியமானதாக பேசப்பட்டது. டாக்டர் பட்டமே பெண் பெற்றிருந்தாலும் வேலைக்கு சென்று பொருள் ஈட்டவில்லை எனில், அந்தப் பட்டம் வெறும் திருமண பத்திரிக்கையில் பெயருடன் இணைத்துக் கொள்வதற்கு மட்டுமே பயன்படும். உலகம் முழுவதும் பெண்கள் முன்னேற்றம் என்பது பல மடங்கு இந்தியாவை விட உயர்ந்திருப்பதற்கு காரணம், அங்கெல்லாம் குடும்பக் கட்டுப்பாடுகள் இல்லை என்பதுதான்.

திராவிட இயக்கங்களின் மிக முக்கியமான இலக்கு பெண் உரிமையும், சமத்துவமும் தான். பெரியார், பெண் உரிமைகளுக்கு எனத் தனித் தீர்மானங்களையும் நிறைவேற்றி இருக்கிறார். 1929 ஆம் ஆண்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் ‘பெண்களுக்கு சொத்தில் சம உரிமை’ எனும் தீர்மானம். பெரியார் உயிருடன் இருக்கும் வரை, அந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், 1989 ஆம் ஆண்டு கலைஞரால் தமிழ் நாட்டில் பெரியார் கண்ட கனவு சட்டமாக்கப்பட்டது.

 Election strategists prediction on Clean sweep victory in the election

இந்த வரலாற்றில், முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மூலம், பெண் பொருளாதாரச் சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்தினார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பெண்களின் உயர் கல்விக்கு மாதம் 1000 ரூபாய் இவையும் பெண்களைக் கவரும் திட்டங்கள். இத்திட்டங்களின் மூலம் 1 கோடியே 6 இலட்சம் குடும்பங்கள் பயன் பெறுகின்றனர். இது உளவியல் ரீதியாக பெண்களுக்குப்  பெரும் பலத்தைக் கொடுக்கிறது இந்தத் திட்டங்கள்.

கலைஞர் கொண்டு வந்த மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தைத்தான், ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 50000 ஆகவும், தாலிக்கு தங்கம் என்றும் அறிவித்தார்.  இதே திட்டத்தைதான், இன்றைய கால வளர்ச்சிக்கு ஏற்ப முதலமைச்சர் ஸ்டாலின், ‘புதுமைப் பெண் திட்டம்’ ஆக மாற்றி, தாலிக்குத் தங்கம் என்பதைவிட, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 என்ற முற்போக்கான திட்டமாகக் கொண்டுவந்தார். இது இளம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தால் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை 29 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலேயே பெண்கள் உயர்கல்வி சேர்க்கையில் 48.6% பெற்று பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலாவதாக உள்ளது. இன்னும் 5 வருடங்களில் புதுமைப் பெண் திட்டம் மூலமாகத் தமிழ்நாடு மிக பெரிய அளவில் முன்னேறி இருக்கும்.

தாலிக்குத் தங்கம் தராமல் இருப்பதைத் தங்களுக்குச் சாதகம் ஆக்கிக் கொள்ள முடியுமா என்று இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் முயலுகின்றனர். ஆனால் பெண் பிள்ளைகள் கல்வி பயில வேண்டும் என்பதைத்தான் தாய்மார்கள் விரும்புகின்றனர். 1921-இல் பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தது நீதிக்கட்சி. அப்போது தொடங்கி, பெண்கள் உரிமையில் இரண்டு திராவிடக் கட்சிகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதில், எம்.ஜி.ஆர் என்கிற ஆளுமை பிம்பமும், ஜெயலலிதா என்கிற பெண் ஆளுமைப் பிம்பமும் அ.தி.மு.கவிற்குப் பெண்கள் வாக்கு வங்கியை உருவாக்கித் திடப்படுத்தியது.

 Election strategists prediction on Clean sweep victory in the election

இப்போது அந்த வாக்கு வங்கியைத் தனக்கானதாக மாற்ற ஸ்டாலின் முயன்றுள்ளார். அதில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் கணிசமாக வெற்றி பெறவும் செய்தார். 2024 இல் இன்னும் பெரிய அளவில் பெண்கள் தி.மு.கவிற்கு வாக்கு அளிப்பார்கள் என்று கணிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் ஏழைப் பெண்களுக்கு ஆண்டிற்கு 1 இலட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம், மத்திய வேலைவாய்ப்பில் 50 சதவிகிதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு ஆகியவையும் பெண் வாக்காளர்களைக் கவர்ந்திருப்பதாகவே சில புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்களே இம்முறை 10 லட்சத்து 89 ஆயிரத்து 394 பேர் அதிகமாக இருக்கிறார்கள். அதனால், இந்த முறை பெண்கள் அளிக்கும் வாக்குகள், தமிழ்நாட்டில் தி.மு.க.வின் வெற்றியை  க்ளின் ஸ்வீப் செய்ய உதவும் என்கிறார்கள் தேர்தல் வியூக வகுப்பாளர்கள்.