Advertisment

தமிழகத்தில் எஞ்சி இருக்கும் ஒரேயொரு சங்ககால கோட்டை... சங்ககால வரலாறும் தொன்மையும் வெளிப்பட வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் உள்ள ஒரேயொருசங்ககாலக் கோட்டையான பொற்பனைக் கோட்டையை அகழாய்வு செய்ய தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திற்கு மத்திய தொல்லியல் ஆய்வுத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம் வேப்பங்குடி ஊராட்சி பொற்பனைக் கோட்டை கிராமத்தில் உள்ள சங்ககாலக் கோட்டையைதமிழ்நாடு திறந்நிலைப் பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் சுற்றுலாவியல் தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வு செய்ய, கடந்த ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறையின் பரிந்துரையின் பேரில் மத்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது அகழாய்வுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு தொல்லியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் மற்றும் பலர் கள ஆய்வு செய்து பல தரவுகளைக் கண்டறிந்துள்ளனர்.

அவற்றின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் அதிக கள ஆய்வு செய்ய மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கோரியதின் பேரில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை முனைவர் இனியன், கள ஆய்வு செய்து 2020ல் ஆய்வறிக்கை சமர்ப்பித்தார்.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒரே சங்ககால கோட்டையான பொற்பனைக் கோட்டையில், முனைவர் இனியனை இயக்குனராகக் கொண்டு அகழாய்வு செய்ய மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

பொற்பனைக் கோட்டை, சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் 1.6 கி.மீ வட்ட வடிவ கோட்டையாக உள்ளது. தமிழகத்தில் சங்ககாலக் கோட்டைகள், அரண்மனைகள் ஆகியவை அழிந்துவிட்ட நிலையில், எஞ்சியுள்ள கோட்டையாக இது உள்ளது. கோட்டையின் செங்கல் கட்டுமானம் 4 அடி அகலமுள்ள சுற்றுச்சுவர், கோட்டை கொத்தளத்தின் ‘ப’ வடிவ அடிக்கட்டுமானம் இன்றளவும் சிதையாமல் உள்ளது. கோட்டையைச் சுற்றி 15அடி ஆழத்தில் 40அடி அகலத்தில் அகழி உள்ளது. சங்ககால நடுகல் ஒன்றை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ராஜவேலு குழுவினரால் கண்டெடுக்கப்பட்டு, 2013ல் ‘ஆவணம்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சங்ககாலத்தில் இருந்த பொற்பனைக் கோட்டையில் இரும்பு உருக்கு ஆலைகள் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதனை அப்பகுதி மக்கள் செந்நாக்குழிகள் என்று அழைக்கின்றனர். செம்புராங்கற்படுக்கையில் காணப்பட்டுள்ள முதல் உருக்காலையாக இது உள்ளது.மேலும் திருவரங்குளம் முதல் பொற்பனைக் கோட்டை வரை இரும்பு உருக்கு ஆலையின் மண்ணாலான உலைகள், இரும்பு வார்ப்பிற்கு பயன்படுத்தப்பட்ட சுடுமண் உருக்கு குழாய்கள் உருக்குகளுடன் ஓரளவு சிதைந்தும் நல்ல நிலையிலும் காணப்படுகிறது.

இந்த கோட்டையை அகழாய்வு செய்யும்போது, சங்ககாலத்தின் வரலாறுகளும் தொன்மையும் வெளிப்படும் என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள்.

puthukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe