
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். மேடையில் அவர் உரையாற்றுகையில், ''அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையோடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்கள். சுமார் 400 கோடி மதிப்பீட்டில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்த அரசு அதிமுக அரசு. அதேபோல் பல்வேறு சாலைகள், பாலங்கள், தடுப்பணைகள், குடிமராமத்து திட்டத்தில் பல ஆண்டுகளாக தூர் வாராமல் இருந்த ஏரி, குளம், குட்டை அத்தனையும் விவசாயிகளின் பங்களிப்போடு தூர் வாரினோம்.
மழைக்காலத்தில் பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்கப்பட்டு நிலத்தடி நீர் உயர்ந்தது. விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைத்தது. குடிப்பதற்கு தேவையான நீரை ஏற்படுத்திக் கொடுத்தோம். இப்படி ஏதாவது ஒரு திட்டத்தை திமுக செயல் படுத்தி இருக்கிறதா? இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒன்றுமே கிடையாது. போட்டோ சூட் தான் நடக்கிறது. அழகா வருவார் போட்டோ எடுப்பார். அதோட அன்றைய தினம் முடிந்து விட்டது. நிறைய இருக்கிறது. ஒன்றா இரண்டா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களுக்கு திட்டமிட்டுச் செயல்படுகின்ற அரசாங்கம் தான் நல்ல அரசாங்கம். அப்படி செயல்பட்டது அதிமுக தான். அதனால் தான் மக்கள் அதிமுகவை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.