
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இரண்டாம் முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்பொழுது மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னதாக கடந்த வருடம் அக்.19 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் 131 நாட்களுக்கு பின் கடந்த மார்ச் 6 ஆம் தேதி தமிழக அரசுக்கு மீண்டும் ஆளுநர் அனுப்பி வைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து மீண்டும் இந்த தடைச் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு மார்ச் 24 ஆம் தேதி முறைப்படி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன. மறுபுறம் தமிழக ஆளுநரின் சர்ச்சை பேச்சுகளுக்கும் பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இரண்டாம் முறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த சட்ட மசோதாவின்படி பணமோ அல்லது வேறு ஏதேனும் பொருட்களையோ வைத்து ஆன்லைன் மூலம் நடைபெறும் சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படும். ஆன்லைன் விளையாட்டு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இனி அந்த சேவையை வழங்க தடை விதிக்கப்படும். அதேபோல் சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்படும். சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவோர் இடையேயான பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான பேமெண்ட்களுக்கும் தடை விதிக்கப்படும்.
ஆன்லைனில் சூதாட்டம் விளையாடினால் மூன்று மாதம் வரை சிறை அல்லது ஐந்தாயிரம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். அதேபோல் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஓராண்டு வரை சிறை அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்டங்களில் ஏற்கனவே தண்டனை பெற்றவர்கள் அடுத்தடுத்து தண்டனை பெறும்போது ஓராண்டுக்கு குறையாமல் மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சட்ட மசோதாவின் படி ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த தனி ஆணையத்தை அமைக்க வேண்டும். ஆணையத்தின் தலைவராக அரசு தலைமைச் செயலாளருக்கு குறையாத பதவி வகித்து ஓய்வுபெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டும் உள்ளிட்டவை ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவின் சாராம்சங்கள் ஆகும்.