
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து, தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்திற்கு, இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்த விரக்தியில், தமிழகத்தைச் சேர்ந்த பலர் தற்கொலை செய்துகொண்டனர். இதையடுத்து, 'ஆன்லைன் ரம்மி', 'போக்கர்' போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து, கடந்த நவம்பர் 21-ஆம் தேதி, தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது.
இந்த அவசரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்குகள்,நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘ரம்மி விளையாட்டு சூதாட்டம் அல்ல. திறமையை வளர்க்கும் விளையாட்டுஎனக் கடந்த 1968-ஆம் ஆண்டே, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தங்கள் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில், பணம் செலுத்தியும், செலுத்தாமலும் விளையாடலாம். இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்கப்படாத நிலையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவில் மட்டுமே தடை விதித்தது தவறானது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளின் அடிப்படையில், ரம்மி விளையாட்டை சூதாட்டமாகக் கருத முடியாது என்பதால், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என, மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனு தொடர்பாக, டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)