/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/high-court-in_90.jpg)
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 3ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.
ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனுசிங்வி, ஏ.கே. கங்குலி, ஆரியமா சுந்தரம், பி.எஸ்.ராமன், கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி சில மரணங்கள் நிகழ்ந்ததால் இந்த விளையாட்டிற்குத் தடை விதித்ததாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஒவ்வொரு ஆண்டும் 20 பேர் வரை பலியாவதாகவும், உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்குத் தடை விதித்தும், மாநில அரசு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் வாதிட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் அரசு, ஆன்லைன் விளையாட்டிற்கு மட்டும் தடை விதித்து சட்டம் இயற்றி உள்ளதாகவும், இது திறமைகளுக்கான விளையாட்டு என்றும் சூதாட்டம் இல்லை என்றும் வாதிட்டனர். மேலும், எந்தவொரு காரணங்களும் இல்லாமல் இந்த தடை விதிக்கபடுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், இந்த விளையாட்டால் நிறைய பேர் ஏமாந்து போயுள்ளதாகவும், பொது நலனைக் கருத்தில் கொண்டு இந்தச் சட்டம் இயற்றப்பட்டதாகவும், இந்தச் சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்குகளின் தீர்ப்பை ஆகஸ்ட் 3ம் தேதிக்குத் தள்ளி வைத்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)