Advertisment

‘மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு’ - உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு சி.பி.எம். வரவேற்பு

Online Rummy CPIM welcomes High Court verdict

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு முழுமையான தடை விதிப்பதே சரியான தீர்வாக இருக்க முடியும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Advertisment

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இளைஞர்கள் பலர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் தற்கொலை முடிவுகளுக்கு தள்ளப்பட்டது, ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் சேமிப்பு, சொத்துக்கள், வாழ்வாதாரத்தை இழந்ததுமான அவலங்களும் அரங்கேறின. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்காக ஆன்லைன் கடன் வழங்கும் நிறுவனங்கள் அவர்கள் பங்கிற்கு மேலும் நிலைமையை மோசமாக்கினார்கள்.

Advertisment

இப்பின்புலத்தில் நீதியரசர் கே.சந்துரு தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் ஆலோசனைகள் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மற்றும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்திற்கு அனுமதி தராமல் தமிழ்நாடு ஆளுநர் இழுத்தடித்தார். இதற்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் எழுப்பியது.

இச்சட்டத்தின் விதிமுறைகள் உருவாக்கப்பட்டபோது அதில் ஆதார் இணைப்பு கட்டாயம், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தடை உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்த நிபந்தனைகளுக்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் (Online Gaming Association) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தன. அவ்வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள இந்த விதிகள் செல்லும்; ரம்மி போன்ற சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு; ஆன்லைன் விளையாட்டுக்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் மோசமான விளைவுகளை கருத்தில் கொண்டு ஒழுங்குமுறை விதிகள் அவசியமாகிறது; நிறைய குடும்பங்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகிற நிலையில் அரசு மவுனம் சாதிக்க இயலாது; அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள தொழில் செய்யும் உரிமை மக்களின் வாழ்வுரிமையை பறிப்பதாக அமைய முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளது. மேலும், நீதிமன்றம் மாநில அரசு தலையிட முடியாது என்ற வாதத்தை மறுத்து, மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு எனவும் கூறியுள்ளது.

இந்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இந்தச் சட்டத்தையும் மீறி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தொடர்வதும், குடும்பங்களின் வாழ்வுரிமை கேள்விக்குள்ளாவதும் தற்போதும் தொடர்வதால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு முழுமையான தடை விதிப்பதே சரியான தீர்வாக இருக்க முடியும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

cpm p shanmugam chennai high court online rummy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe