online game related case Judgment postponed

தமிழக சட்டப் பேரவையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்காக ‘தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக விதிமுறைகள் இயற்றப்பட்டுக் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கிடையே ஏராளமானோர் இந்த ஆன்லைன் விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. எனவே ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஆதார் எண்ணை இணைத்ததுடன், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனையடுத்து இது தொடர்பான வழக்குகள் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. அதன்படி இந்த வழக்கு கடந்த 4ஆம் தேதி (04.04.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமிர்த திவாரி, வழக்கறிஞர் அரவிந்த ஆகியோர் ஆஜராகினர். அப்போது அவர்கள் வாதிடுகையில், “பணம் செலுத்தி ரம்மி விளையாடினால் அதுவும் சூதாட்டம் தான்.

Advertisment

எனவே ஆன்லைன் ரம்மியை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு உரிமையுள்ளது. இதனை ஒழுங்குபடுத்துவது தமிழக அரசின் கடமையாகும். பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் மூலம் வயதை முறையாகச் சரிபார்க்க முடியாது என்பதால் ஆதார் இணைக்கப்பட்டது. இது அரசின் கடமை. தமிழக அரசால் ஆன்லைன் ரம்மியை ஒழுங்குபடுத்த முடியாது என்ற நிறுவனங்களின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துவிட்டது. ஆன்லைன் ரம்மி விளையாடுவதால் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் விளையாடுபவர்களின் விவரங்களைக் கேட்பதால் தனிப்பட்ட உரிமைக்கு எந்த பாதிப்பும் கிடையாது. எனவே ஆதார் எண் கேட்கப்படுவதையும், கை தவிர எந்த ஒரு தனிப்பட்ட தகவலும் கேட்கப்படவில்லை. 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாடக்கூடாது என்பதற்காகவே ஆதார் எண் கேட்கப்படுகிறது” எனத் தமிழக அரசின் வாதம் நிறைவடைந்தது. இதனையடுத்து ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வாறு இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தேதியினை குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.