/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-9_44.jpg)
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியைச்சேர்ந்தவர் வியாபாரி முத்துக்குமார். இவரது மனைவி சரண்யா(42). இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 18-ஆம்தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து வாட்ஸப் கால் வந்தது. உடனே சரண்யா போனை ஆன் செய்து பேசி உள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் தன்னுடைய பெயர் ரம்யா கிருஷ்ணா. நான் ஆஸ்திரேலியா நார்மல் ஹார்பே கம்பெனியின் ஒரு கிளையை நிர்வகித்து வருகிறேன். நீங்கள் எங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய சரண்யா தனது வங்கி கணக்கில் இருந்து, ரூ.10,500 முதலீடு செய்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரது வங்கி கணக்குக்கு ரூபாய் 14 ஆயிரம் வந்து சேர்ந்தது. இவ்வாறு கடந்த 20, 21 ஆகிய தேதிகளில் சிறு, சிறு தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெற்றார். அதைத் தொடர்ந்து கடந்த 22-ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள டீக்கடைக்கு ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 300 ரூபாய் அனுப்பினார். ஆனால் அதற்கு லாபத்தொகை உடனடியாக அவரது வங்கி கணக்குக்கு வரவில்லை. அப்போது சரண்யா ரம்யாவைத்தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதற்கு அந்தப் பெண்மணி ஆன்லைன் வர்த்தகத்தில் உங்கள் தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனத்தெரிவித்தார். இதை நம்பிய அவர் மீண்டும் 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை மேற்கண்ட நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்தார். அதன் பின்னர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. முதலீடு தொகையும் வரவில்லை. லாபமும் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட சரண்யா உடனடியாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கன்னிகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)