Advertisment

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

kathiramangalam ongc

கதரிமங்கலத்தில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளதால் எண்ணெய் கிணறுகளை மூட வேண்டும், மேலும் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் உள்ள எண்ணெய்க் கிணறுகளிலிருந்து குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் ஏற்பட்ட உடைப்புக் காரணமாக எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு பயிர்கள் சேதமடைந்துள்ளன. மக்களின் தொடர் போராட்டத்திற்கு பிறகு இத்தகைய கசிவுகள் கட்டுப்படுத்தப்படாதது கண்டிக்கத்தக்கது.

Advertisment

காவிரிக் கரையில் அமைந்துள்ள கதிராமங்கலம் மூன்று போகம் விளையும் வளமான பூமியாகும். ஆனால், 2002-ஆம் ஆண்டு கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுப்பதற்கான எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, விவசாயம் சீரழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி, கதிராமங்கலத்திலிருந்து குத்தாலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட குழாய்கள் அடிக்கடி அழுத்தம் தாங்க முடியாமல் உடைந்து சிதறுவதும், அவற்றிலிருந்து வெளியேறும் கச்சா எண்ணெய் வயல்வெளிகளில் பாய்ந்து பலநூறு ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசப்படுத்துவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டன. இதைத் தடுத்தும் நிறுத்தும்படி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து வருங்காலங்களில் எண்ணெய்க்கசிவு ஏற்படாமல் தடுக்கப்படும் என்று ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், இன்று வரை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது தான் பெருஞ்சோகம்.

கதிராமங்கலத்தில் நேற்று மாலை மதகடி மாயானம் சாலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் அருகில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் பரப்பளவுள்ள வயல்வெளியில் பாய்ந்து நெற்பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. கச்சா எண்ணெய்க்கசிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள போதிலும், இப்போது வரை கச்சா எண்ணெய் குழாய்கள் மாற்றப்படவில்லை. அடும்பாடு பட்டு நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிருக்கு ஏற்பட்ட இழப்புக்கு அரசுத் தரப்பில் நிவாரணம் அளிக்கப்படுமா? என்பது தெரியவில்லை. எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பகுதியில் சில இடங்களில் கச்சா எண்ணெய் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.

கதிராமங்கலத்திலிருந்து குத்தாலம் வரை 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள குழாய் பாதைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால் அப்பகுதி மக்கள் சந்திக்கும் இழப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30&ஆம் தேதி இதேபோன்று கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாக கச்சா எண்ணெய்க் கிணறுகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கதிராமங்கலம் பகுதி மக்கள் கடந்த ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி முதல் தொடர்போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். கதிராமங்கலம் மக்களின் போராட்டம் இன்று 345 நாளை எட்டியுள்ள நிலையில், புதிதாக ஏற்பட்ட கசிவால் மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கிட்டத்தட்ட ஓராண்டாக போராடும் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தமிழக அரசு, ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் அத்துமீறல்களுக்கு பாதுகாவலனாக செயல்பட்டு வருகிறது. தங்கள் உரிமைகளுக்காக போராடும் கதிராமங்கலம் மக்களை பகையாளிகளாக நினைத்து அவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்தல், தடியடி நடத்துதல் போன்ற அடக்குமுறைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கை மன்னிக்க முடியாத மக்கள்விரோத செயலாகும்.

அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட முன்னேறிய நாடுகளில் மக்கள் வசிக்காத பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய்க் குழாய்கள் வெடித்ததால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டது உலகறிந்த வரலாறு ஆகும். இதைக் கருத்தில்கொண்டு வளர்ந்த நாடுகளில்கூட மக்கள் வாழும் பகுதிகளில் கச்சா எண்ணெய்க் குழாய்கள் அமைப்பதைப் பெரும்பாலும் அந்த நாட்டு அரசுகள் தவிர்த்து வருகின்றன. வளர்ந்த நாடுகளிலேயே கச்சா எண்ணெய்க் குழாய்கள் உடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க தொழில்நுட்பம் இல்லாத நிலையில், எந்த வசதியும் இல்லாத, கதிராமங்கலம் மற்றும் அதன் பகுதியில் கச்சா எண்ணெய்க் குழாய்கள் புதைக்கப்பட்டிருப்பது எந்த வகையிலும் பாதுகாப்பானது அல்ல.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், வேளாண் விளைநிலங்கள் சீரழிவைத் தடுக்கவும் கதிராமங்கலத்தில் உள்ள எண்ணெய்க் கிணறுகளை மூடிவிட்டு, ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

anbumani ongc kathiramangalam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe