Skip to main content

'ஒரு ஏக்கர் சம்பாவும் எண்ணெயில மெதக்குதுங்க' -விவசாயிகளின் கண்ணீருக்கு காரணமான ஓ.என்.ஜி.சி!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

ONGC

 

விளைநிலங்களில் புதைக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி குழாய்களிலிருந்து கசியும் கச்சா எண்ணெயால், பயிரிட்ட நெற்பயிர்கள் எண்ணெயில் மிதப்பதைக் காணமுடியாமல் கண்ணீர் விடுகின்றனர் திருவாரூர் விவசாயிகள். 

திருவாரூர் கீழ எருக்காட்டூர் கிராமத்தில் விளைநிலத்தில் பதிக்கப்பட்டிருந்த எண்ணெய்க் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்து, வயல் முழுவதும் பரவியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், "கடந்த நான்கைந்து வருடங்களாக, பத்துக்கு மேற்பட்ட விளைநிலங்களில் கச்சா எண்ணெய்க் கசிந்து விளைநிலங்கள், வேளாண்மை செய்யமுடியாத நிலங்களாக மாறி உள்ளது. இங்குள்ள சிறு, குறு மற்றும் ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் எண்ணெய்க் கசிவால் முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்துவருகிறார்கள்" என்றார்.

கீழ எருக்காட்டூர்  மட்டுமல்ல, மேல எருக்காட்டூர், கமலாபுரம் பகுதிகளில் ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமாக சுமார் 20 எண்ணெய்க் கிணறுகள் உள்ளது. அந்தக் கிணற்றிலிருந்து வெள்ளக்குடியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்கள் விவசாய நிலங்களின் மீது செல்கிறது. அப்படிச் செல்லும் குழாய்களில், கீழ எருக்காட்டூர் விவசாய நிலம் வழியாகச் செல்லும் குழாயில் தான் தற்பொழுது எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியில் தனசேகரன் என்பவரது விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி குழாயில் இருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. தற்போது அதே குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு ஏக்கர் சம்பா பயிர் கச்சா எண்ணெயில் மூழ்கி கிடக்கிறது. 2018 ஆம் ஆண்டு தனசேகரனின் விளைநிலத்தில் புதைக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்தது. அதற்காக பல லட்ச ரூபாய் செலவில் மண்ணை மாற்றி, திரும்பவும் விவசாயம் செய்துள்ளார் தனசேகரன்.

 

Ad



ஆனால், தற்போது அவர் நிலத்திற்கு அருகில் உள்ள நிலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "அரசாங்கத்திற்குச் சொந்தமான எத்தனையோ இடங்கள் இருக்கிறது. அதன் வழியாக இந்தக் குழாயைக் கொண்டு செல்ல வேண்டும். எங்க விவசாய நிலங்களில் இந்த ஓ.என்.ஜி.சி குழாய்களைக் கொண்டு செல்ல வேண்டாம். ஒரு ஏக்கர் சம்பாவும் எண்ணெயில மெதக்குதுங்க எனக் கண்ணீரோடு தெரிவித்தார். மேலும், அப்பகுதி விவசாயிகளும் ஓ.என்.ஜி.சி குழாயை வேறு வழியில் மாற்றியமைக்க கோரிக்கை வைத்தனர்.

 

கச்சா எண்ணெய்யை கசியத் தொடங்கி சுமார் 15 மணி நேரம் கழித்து ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் நிகழ்வு இடத்திற்கு வந்து பாதிப்புகளைச் சீரமைக்கும் பணியில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் முறையான சான்றிதழ் பெற்றுக் கொடுத்தால், இழப்பீடு வழங்கப்படும் எனவும் ஓ.என்.ஜி.சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.