Skip to main content

ஓஎன்ஜிசிக்கு ஆதரவான விழிப்புணர்வு கூட்டத்தை தடுத்து நிறுத்தினார் பி.ஆர்.பாண்டியன்!

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 20 ந் தேதி சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டுவந்து சட்டமாக அறிவித்தார். இந்த அறிவிப்பில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லப்பட்டிருந்ததால் ஒட்டு மொத்த தமிழக விவசாயிகளும் மகிழ்ந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். 
 

ஆனால் இந்தச் சட்டத்தில் பல ஓட்டைகள் இருப்பதை நக்கீரனும் சுட்டிக்காட்டியது விவசாய சங்க நிர்வாகிகளும் சுட்டிக்காட்டினார்கள். அதாவது பிப்ரவரி 20- ஆம் தேதிக்கு பிறகு ஹைட்ரோ கார்பன் போன்ற வேளாண்மைக்கு எதிரான திட்டங்கள், செயல்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் அதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னவாகும் என்பதை குறிப்பிடவில்லை. அந்த தி்ட்டங்களையும் ரத்து செய்தால் தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாதுகாக்கப்படும் இல்லை என்றால் இந்த சட்டமே பயனற்று போகும் என்பதை தொடர்ந்து அழுத்தி சொல்லி வருகிறோம். ஆனால் தமிழக அரசு எந்த பதிலும் சொல்லவில்லை. அரசாங்கத்தின் மௌனம் இன்று மன்னார்குடியில் ஆர்டிஒ மூலம் அம்பலமாகிவிட்டது.

ONGC AWARNESS MEETING PR PANDIYAN

ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது என்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ள நிலையில் சோழங்கநல்லூரில் விவசாயிகளால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி பணியை மீண்டும் தொடர சில விவசாயிகள் ஓஎன்ஜிசி அதிகாரிகள் போலீசார் உள்பட அதிகாரிகளை வைத்து மன்னார்குடியில் ஆர்டிஒ ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுத் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் தமிழக அரசுக்கு எதிரான கூட்டம் இது கூட்டம் நடத்தக்கூடாது என்று வாதிட்டனர். அப்போது பேசிய அதிகாரி சட்டம் இயற்றுவதற்கு முன்பு உள்ள திட்டம். இது அதனால் ஆய்வுக் கூட்டம் நடத்துவதாக கூறினார். ஆனால் கூட்டத்தை நடத்தவிடாமல் செய்தனர் விவசாயிகள்.
 

இது பற்றி பி.ஆர்.பாண்டியன் கூறும் போது, "திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர், பெரியகுடி ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி துவங்கி விட்டதாக", கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்ததார். 
 

ஏற்கனவே காவிரி டெல்டாவில் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக தோண்டப்படும் கிணறுகளை தடுத்து நிறுத்தி வெளியேற்ற வேண்டும் என்று 2019 ஜூலை 19 அன்று கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு காத்திருப்பில் ஈடுபட்டோம். 

ONGC AWARNESS MEETING PR PANDIYAN

இதனையடுத்து மன்னார்குடி கோட்டாட்சியர் தலைமையில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் முன்னிலையில் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் 2016 முதல் காவிரி டெல்டாவில் புதிய கிணறுகள் அமைக்க தமிழக அரசு தடை விதித்துள்ளதால் எந்தவொறு இடத்திலும் அனுமதி வழங்கவில்லை எனவும், பெரியகுடி, சோழங்கநல்லூர் ஆகிய இரு கிணறுகளும் சட்டவிரோதமாக தோண்டப்படுவதாக நாகப்பட்டினம் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். 
 

இதனையடுத்து உடனே கிணறு அமைக்கும் பணியை கைவிட்டு வெளியேற வேண்டும் என எழுத்துப்பூர்வமாக  உடன்பாடு ஏற்பட்டதால் பெரியகுடி கிணறு தோண்டும் பணியை நிறுத்திவிட்டு வெளியேறியது. சோழங்கநல்லூர் கிணறு மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் கலந்து பேசி வெளியேறுவதாக தெரிவித்தது. 6 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது தமிழக அரசு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தடை விதித்துள்ளது. 
 

இதனை பின்பற்றி சோழங்கநல்லூர் கிராமத்தில் கிணறு தோண்டப்பட்டு ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்ச்சிக்கும் ஓஎன்ஜிசி- யின் சட்ட விரோத செயல்பாட்டை தடுத்து நிறுத்தி வெளியேற்ற வேண்டும். இல்லையேல் பேரழிவு ஏற்படும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினோம். உடன் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்க்கொள்வதாக உறுதியளித்தார். 
 

இதனையடுத்து அதே கோரிக்கையை வரியுறுத்தி 25.02.2020 ல் மன்னார்குடி RDO விடமும் மனு அளித்தோம். இது குறித்து வரும் 29.02.2020 முத்தரப்பு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார். 
 

இந்நிலையில் சோழங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 4 பேரை அழைத்து வந்து  ONGC அதிகாரிகள் முன்னிலையில் இன்று 26.02.2020 காலை 11.00 மணிக்கு மன்னார்குடி RDO தனது அலுவலகத்தில் சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்கும் பணிக்கு ஆதரவாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுவதாக வந்த தகவலை அறிந்து கூட்ட அரங்கிற்கு வந்தோம்.
 

தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களுக்கு முரனாக இக் கூட்டம் நடைபெறுவதை அனுமதிக்க முடியாது கைவிட வேண்டுமென வலியுறுத்தியதையடுத்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டத்திலிருந்து ONGC அதிகரிகளும், கிராமத்தினர் 4 பேரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து கூட்டம் துவக்கத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டது என்றார். மேற்கண்டவாறு பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  
 

அவருடன் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சு.செந்தில்குமார், நகர தலைவர் தங்கமணி, மன்னை ஒன்றிய தலைவர் எம்.மனோகரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். அரசாங்கம் சொன்னது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது. அதனால் தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.