Advertisment

'இன்றுடன் ஓராண்டு' - வேங்கைவயலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

 'One year from today'- increased police security in vengaivayal

கடந்த ஆண்டு டிசம்பர் 26 ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வந்த தண்ணீரை குழாய்களில் பிடித்த மக்களுக்கு அதிர்ச்சி. அந்த தண்ணீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டிருந்ததை சில இளைஞர்கள் தொட்டியில் ஏறிப் பார்த்து சொன்னார்கள்.

Advertisment

இந்த தகவல் அறிந்து ஒரு மணி நேரத்தில் அங்கு வந்த கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் எம்.சின்னத்துரை தண்ணீரை பார்த்தவுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவைத்தார்.

Advertisment

அப்போது நம்மிடம் பேசிய தோழர் எம்.சின்னத்துரை, 'இந்த ஊரில் வாழும் மக்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். யாரோ இந்த இழி செயலை செய்திருக்கிறார்கள். அந்த இழி செயலை செய்த சமூகவிரோதிகளை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறோம். போலீசார் விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள். குடி தண்ணீருக்கு மாற்று ஏற்பாடு செய்ய சொல்லி இருக்கிறோம். இந்த வேங்கைவயல் கிராமத்தில் சில குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குடிநீரால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்றும் ஆய்வு செய்ய வேண்டும்' என்றார்.

இந்த விவகாரம் இந்திய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியது. பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை முன்னெடுத்தனர். வேங்கைவயல், இறையூர் ஆகிய கிராம மக்களும் இந்தப் பிரச்சனையால் எங்களுக்குள் வேற்றுமையை உருவாக்க நினைத்துள்ளனர். அதனால் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்றனர். தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கி விசாரணை சென்று கொண்டிருந்த போது சிலர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததாக தனிப்படை போலீசார் போலிசார் கூறிவந்தனர். பாதிக்கப்பட்ட எங்கள் தரப்பையே விசாரணைக்கு அழைக்கிறார்கள் என்று வேங்கைவயல் மக்கள் குற்றம்சாட்டினர். இதற்கிடையில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கயல்விழி ஆகியோர் வந்து சமத்துவப் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

ஜனவரி 25 ந் தேதி இந்த வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றியது தமிழ்நாடு அரசு. அடுத்த நாளே விசாரணை தொடங்கி சுமார் 220 பேருக்கு மேல் விசாரணை சென்ற நிலையில் சாட்சிகள் இல்லாததால் அறிவியல்பூர்வமாகவே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனித கழிவு கலக்கப்பட்ட தண்ணீரை சோதனைக்கு அனுப்பினர். அதில் பெண் உட்பட சிலரது கழிவுகள் கலக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் வந்தது. அதன் பிறகு சம்பவம் நடந்த அன்று வேங்கைவயல் இளைஞர்கள் உட்பட பலர் உறுப்பினர்களாக உள்ள வாட்ஸ் அப் தளத்தில் நடந்த உரையாடலை வைத்து அதில் ஒரு போலீஸ்காரர் உட்பட 2 பேரிடம் குரல் பரிசோதனை செய்யப்பட்டது.

இதனையடுத்து வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணாவை தனிநபர் கமிசனாக அமைத்தது தமிழ்நாடு அரசு. தொடர்ந்து டிஎன்ஏ பரிசோதனைக்கு பலரது பட்டியலை நீதிமன்றத்தில் கொடுத்தனர். முதல்கட்டமாக பலர் இந்த பரிசோதனைக்கு உட்பட மறுத்தனர். அதன் பிறகு பரிசோதனைக்கு வந்தனர்.

இதுவரை 31 பேருக்கு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. வேங்கைவயல் குற்றவாளிகளை வெளி உலகுக்கு காட்டுங்கள் என்று தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றனர்.

டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு உண்மையான குற்றவாளியை கண்டறிய முடியாமல் திணறும் விசாரணைக்குழுவினர் அடுத்தகட்டமாக உண்மை கண்டறியும் சோதனைக்கு பலரை உட்படுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையிலும், இதுவரை ஒருவரைக் கூட பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர் சிபிசிஐடி போலீசார். எத்தனையோ வழக்குகளில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்யும் போலீசார் வேங்கைவயல் சம்பவத்தில் அரசியலுக்காக மெத்தனமாக செயல்படுகிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் பொதுமக்கள்..

இது மற்ற வழக்குகள் போல சாதாரனமாக முடித்துவிட முடியாது. அறிவியல்பூர்வமாகவே நிரூபிக்க வேண்டியுள்ளதால் தான் இத்தனை சோதனைகளும் நடத்தி வருகிறோம் என்கின்றனர் போலீசார்.

வேங்கைவயல் சம்பவம் நடந்தது இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளதால், வேங்கைவயல் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வேங்கை வயல் கிராமத்தைச் சுற்றியுள்ள சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Untouchability vengaivayal Pudukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe