
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையம், வடக்கு வீதியைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண் முத்துமாரி. அவர் இன்று 16ந் தேதி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். பிறகு அவர் கூறும்போது, “சென்ற 2018 ஆம் ஆண்டு சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலம் தீனதயாளன் என்பவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. இந்தப் பழக்கம் எங்களுக்குள் நாளடைவில்காதலாக மாறியது.
தீனதயாளன் எனக்கு திருப்பூரில் வேலை வாங்கித்தருவதாகக் கூறினார். நானும் திருப்பூருக்குச் சென்றேன். பெருமாநல்லூரில் உள்ள நேதாஜி அப்பேரல் பார்க் என்ற இடத்தில் உள்ள ஒரு கம்பெனியில் அவர் என்னை வேலைக்குச் சேர்த்துவிட்டார். நான் அந்த கம்பெனியின் மகளிர் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தேன். தீனதயாளனும் நானும் விடுமுறை நாட்களில் நேரில் சந்திப்பதும் பிறகு தொலைப்பேசியில் பேசுவதும் வாடிக்கையாக இருந்தது. ஏன் மகளிர் விடுதியில் தங்க வேண்டும் வெளியில் தனியாக வீடு பார்த்துள்ளேன், அதில் தங்கலாம் எனக் கூறினார்.
இதனால் நான் விடுதியை காலி செய்து அவருடன் ஒரே வீட்டில் தங்கி திருமணம் ஆகாமலேயே கணவன் மனைவியாய் வாழ்ந்து வந்தோம். உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி என்னோடு உறவு வைத்துக் கொண்டார். ஆறு மாதம் பொறுத்திரு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்வதாக உறுதி கொடுத்தார். நான் முழுமையாக அவரை நம்பினேன். பிறகு அவர் அவரது வீட்டுக்குப் போய் விட்டார். வாரத்துக்கு இரண்டு முறை மட்டுமே வந்து என்னோடு இருந்து செல்வார். இந்த நிலையில், நான் கர்ப்பம் ஆனேன். தீனதயாளனிடம் இதுபற்றி கூறி என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளுங்கள் என வேண்டினேன்.
அவர் என்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறினார். அதிர்ச்சியடைந்த நான் கோபி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றேன். அப்போது தீனதயாளனின் பெற்றோர் வந்து என்னைத் தடுத்து நிறுத்தி நாங்கள் திருமணம் செய்து வைக்கிறோம் என உறுதி கூறினார்கள். அதே போல் உங்கள் திருமணம் நடைபெற வேண்டுமென்றால் நீ கர்ப்பத்தைக் கலைத்து விட்டு வர வேண்டும் என்றனர். பிறகு தீனதயாளனின் அம்மாவே என்னை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எனது வயிற்றில் இருந்த கருவைக் கலைக்க வைத்தார். பிறகு இப்போது நடந்த தேர்தலில் ஓட்டு போடுவதற்காக எனது ஊருக்கு என்னை அனுப்பி வைத்தார்.
தேர்தல் முடிந்து ஓட்டுபோட்டப் பிறகு மீண்டும் அவங்க ஊருக்கு நான் சென்றபோது நீ இனிமேல் இங்கு வரக்கூடாது என தீனதயாளன், அவரது பெற்றோர்கள் என்னை மிரட்டினார்கள். என் மகன் உன்னுடன் சேர்ந்து வாழ மாட்டான் எனக் கூறி என்னை துரத்தி விட்டனர். இதனால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகி உள்ளேன். என்னைத் திருமணம் செய்வதாகக் கூறி கட்டாயப்படுத்தி என்னோடு உறவுவைத்து அதன் மூலம் உருவான கருவைக் கலைக்க வைத்த எனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் ஏமாற்றப்பட்டுள்ளேன், எனது நிலை போல் வேறு யாருக்கும் வரக்கூடாது என்றால் ஃபேஸ்புக்கை நம்பாதீங்க” என்றார் பரிதாபமாக.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)