'அதில் ஒருவர் குற்ற வழக்கு பின்னணி உள்ளவர்'-ஈசிஆர் சம்பவம் குறித்து காவல்துறை விளக்கம்

 'One of them has a criminal background'-Deputy Commissioner of Police explains about the ECR incident

சென்னை கானத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுடன் கடந்த 25ஆம் தேதி (25.01.2025) இரவு முட்டுக்காடு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திமுகவின் கட்சிக் கொடி கட்டிய சொகுசு காரில் வந்த 6 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையில் அவர்களின் காரை குறுக்காக நிறுத்தினர். அதோடு அந்த இளைஞர்கள் பெண்கள் வந்த காரை தாக்குவதும், ஆபாசமாகப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமடைந்த பெண்கள் காரை பின்னோக்கி (ரிவர்ஸ்) இயக்கியபடி சுமார் 4 கிலோமீட்டர் அளவுக்கு சென்று வீட்டை அடைந்தனர். பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விளக்கங்களை அளித்தார். ''ஒரு டாடா சஃபாரி, ஒரு மகேந்திரா கார் என இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகார்தாரர் இரவு 2 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி 3:30 மணிக்கு குழந்தை அழுகிறது என வீட்டுக்கு வெளியில் வந்துள்ளார். அப்போது லாங் டிரைவிங் வந்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். கைதான நான்கு பேரில் சந்துரு என்ற நபரைத் தவிர காரில் இருந்த மற்றவர்கள் மீது எந்த வழக்குகளும் இல்லை. சந்த்ருவிற்கு குற்ற வழக்கு பின்னணி இருக்கிறது. சந்துரு மீது ஆட்கடத்தல் மற்றும் மோசடி என இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. புகார்தாரரான பெண் தனது குழந்தை அழுதால் அதை சமாதானப்படுத்துவதற்காக வீட்டிற்கு வெளியே வந்து லாங் டிரைவிங் வந்த பொழுது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எந்தவித கால தாமதமும் இல்லாமல் சிஎஸ்ஆர் பதிவு செய்து கொடுத்திருக்கிறோம். அவர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் முதல்கட்ட விசாரணையை நாங்கள் நடத்தி வருகிறோம். புகார்தாரர் சொன்ன உண்மைத் தன்மையை நாங்கள் ஆராய்ந்து சிசிடிவி கட்சி மற்றும் தனிப்படை அமைத்து டோல்கேட்களை ஆய்வு செய்தோம். வாகனங்களை ஆய்வு செய்தோம். இவற்றையெல்லாம் தீர்மானித்த பிறகு வழக்கு பதிவு செய்தோம். காவல்துறை தங்களுடைய கடமை தெளிவாக திறம்பட செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட நான்கு பேரை கைது செய்துள்ளோம் மூன்று பேர் இன்னும் கைது செய்ய வேண்டி இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் கல்லூரி மாணவர்கள். அவர்களுடைய அப்பா அம்மா வேறு வேறு தொழில்களிலோ, வேலைகளோ இருந்திருக்கலாம் அதைப்பற்றி நாம் பெரிதாக பேசுவதற்கு இல்லை'' என்றார்.

Chennai police
இதையும் படியுங்கள்
Subscribe