One person passed away in a sudden lorry tyre burst in Salem

சேலம் மாவட்டம் ஆலந்தூர் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது ரெட்டிபாளையம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். 34 வயதான இவர், சொந்தமான லாரி ஒன்றை வைத்து, அதில் லோடுகளை ஏற்றி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜ்குமாருக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கவிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும், லாரி உரிமையாளராக இருக்கும் ராஜ்குமார், தன்னுடைய தொழிலில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை பாதுகாத்து வந்தார்.

Advertisment

இத்தகைய சூழலில், கடந்த 16ஆம் தேதியன்று ராஜ்குமார் வழக்கம்போல் தனது லோடு வேலைகளுக்கு சென்றிருந்தார். இதற்கிடையில், அன்று மாலை 4 மணியளவில் சங்ககிரி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனைக்கு அருகே உள்ள லாரி பட்டறையில் தன்னுடைய லாரியை பழுது பார்ப்பதற்காக நிறுத்தியுள்ளார். இதையடுத்து, அந்த லாரி பட்டறையில் இருந்த 60 வயதான மோகனசுந்தரம் என்பவர், லாரி டயர்களை டிஸ்க்கில் இருந்து கழற்றி அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா என சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது, அந்த டயரில் பஞ்சர் ஏற்பட்டதை அடுத்து அதற்கு பேட்ச் ஒர்க் செய்யப்பட்டது. இதனிடையே, லாரியில் இருந்து கழட்டப்பட்ட டயரை சரியாக டிஸ்க்கில் பொருந்தாமல் மீண்டும் லாரியில் மாற்றியதாக கூறப்படுகிறது. மேலும், இதை கவனிக்காத மோகனசுந்தரம் ஏர் காம்ப்ரசர் மூலம் காற்று பிடித்துள்ளார். அந்த சமயம், யாரும் எதிர்பாராத நேரத்தில் ஏர் காம்ப்ரசர் காரணமாக அந்த டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்து மேலே பறந்து சென்றது. இதில், அங்கிருந்த மோகனசுந்தரம் தூக்கி வீசப்பட்டார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த ராஜ்குமார் உடனடியாக ஓடிச் சென்று மோகன சுந்தரத்தை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அந்த நேரத்தில் மேலே பறந்து சென்ற டயர் திடீரென ராஜ்குமாரின் தலையில் விழுந்தது. அதில், நிலைகுலைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். மேலும், அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ஒருகணம், இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த லாரி உரிமையாளர் ராஜ்குமார் மற்றும் டயர் கடைக்காரர் மோகனசுந்தரம் ஆகியோரை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், ஐசியுவில் இருந்த ராஜ்குமார் கடந்த 17 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது, இதையறிந்த அவரது உறவினர்கள் ராஜ்குமாரின் உடலை பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மேலும், விபத்தில் சிக்கிய மற்றொரு நபரான மோகன சுந்தரம் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகைய சூழலில், அந்த லாரி பட்டறையில் திடீரென டயர் வெடித்து சிதறுவதும் அதில் ராஜ்குமார் மற்றும் மோகனசுந்தரம் ஆகியோர் சிக்கிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்ற சென்ற லாரி உரிமையாளர் திடீரென ராட்சத டயர் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.