One person passed away electrocuted during a Sami procession cuddalore

கடலூர் வட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள சின்ன இருசாம்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மே 29ம் தேதி கொடியேற்றத்துடன் செடல் உற்சவ விழா தொடங்கியது. தினமும் சாமிக்கு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதணை காண்பிக்கப்பட்டு, இரவில் வீதி உலா நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வாக செடல் திருவிழாநடைபெற்றது.

Advertisment

அதனைத் தொடர்ந்து நேற்று (06-06-25) இரவு சாமி வீதி உலா நடைபெற்றது. சுவாமியை, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சப்ரத்தில் வைத்து இழுத்து சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் தாழ்வாக சென்ற உயர் மின் அழுத்தம் கொண்ட மின் கம்பியில் உரசியது.இதில் மின்சாரம் தாக்கி 5 பேர் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி பெரியார் நகரைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் கர்ணாசந்திரன் (40) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே போல், அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சிவமணி (22), அரி கிருஷ்ணன் மகன் கண்ணன் (55), பெருமாள் மகன் முருகையன் (35), மணிகண்டன் மகன் ஸ்ரீவேஷ் (6) ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.

Advertisment

அதனை தொடர்ந்து, படுகாயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டி சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கர்ணாசந்திரன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் உயிரிழந்த கர்ணாசந்திரன், சின்ன இருசாம்பாளையத்தில் உள்ள அவரது மாமனார் அரிகிருஷ்ணன் வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்துடன் வசித்து வந்தார் என்பதும் அவருக்கு உமா (35) என்ற மனைவியும், ராகவன் (15) என்ற மகளும் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.