
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் ஏம்பல் அருகில் உள்ள வேவளாணி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (34). இவரது குழந்தைக்கு நேற்று முதல் பிறந்த நாள் என்பதால் உறவினர்கள், நண்பர்களுக்கும் அழைப்புக் கொடுத்துள்ளார். பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டிய பிறகு கலந்து கொண்ட அனைவருக்கும் கேக் மற்றும் அசைவ உணவு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அதே ஊரைச் சேர்ந்த கருப்பையா(60) என்பவருக்கு இரவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். இந்த தகவல் பரவிய நிலையில் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று அசைவ உணவு சாப்பிட்ட சின்னப்பொண்ணு, மஞ்சுளா, அஞ்சலி தேவி, சீனிவாசன், கீர்த்தனா, விசாலி, நாகரெத்தினம், லெட்சுமி, வடிவுக்கரசி உள்பட சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

கருப்பையா உயிரிழந்த தகவலையடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டவர்கள் ஏம்பல், ஆவுடையார்கோயில், அறந்தாங்கி மற்றும் சிவகங்கை மாவட்டம் சூரக்குடி ஆகிய ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் கூடுதல் சிகிச்சை தேவைப்படுவோரை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் ஏம்பல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் ஆகியோர் சிகிச்சையில் இருந்தவர்களிடம் நேரில் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விபரங்களை கேட்டறிந்தனர். மேலும் ஏம்பல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அசைவ உணவு சாப்பிட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டதா அல்லது பிறந்த நாள் கேக் சாப்பிட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டதா என்று விசாரணை செய்து வருகின்றனர்.