/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chandru-our-file_0.jpg)
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த ஒரு நபர் குழு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவிக்கையில், “இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சினை என்பதால், இதில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இந்தக் குழு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்திடும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரியில் ஏற்படும்சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பது குறித்து கருத்து தெரிவிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கருத்துகள் தெரிவிக்க ஒரு நபர் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)