
வீரகனூர் அருகே, தன் மனைவியுடன் முறையற்ற உறவில் இருந்தவரை தட்டிக்கேட்ட வைக்கோல் வியாபாரியை ஃபேன்சி ஸ்டோர் கடைக்காரர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார்.
சேலம் மாவட்டம் வீரகனூரைச் சேர்ந்தவர் செல்வம் (55). வைக்கோல் வியாபாரி. இவருடைய மனைவி வித்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். செல்வத்தின் நண்பர் செல்வராஜ் (58). இவர், வீரகனூர் பேருந்து நிலையத்தில் டிராவல்ஸ், ஃபேன்சி ஸ்டோர் வைத்துள்ளார்.
இவருடைய கடையில் செல்வத்தின் மனைவி வித்யா வேலை செய்து வந்தார். அப்போது செல்வராஜூக்கும், வித்யாவுக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. இது ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் முறையற்ற உறவாக மாறியது. 5 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களிடையே இந்த உறவு நீடிக்கிறது. இதையறிந்த செல்வராஜின் மனைவி தாரா, அவர்களை கண்டித்துள்ளார். இது தொடர்பாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு தாராவை, செல்வராஜ் கொலை செய்துவிட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் பிணையில் வெளியே வந்தார்.

இது ஒருபுறம் இருக்க, செல்வத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவருடைய மனைவி வித்யா பிரிந்து சென்று, வாழப்பாடியில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த பிறகும் செல்வராஜ், அடிக்கடி வித்யாவை சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளார். ஒருபுறம் உதாசீனப்படுத்திவிட்டுச் சென்ற மனைவி; மறுபுறம் அவருடன் தன் நண்பரே உறவில் இருந்ததால் கொதிப்படைந்த செல்வம், தன் மனைவியுடனான தொடர்பை விட்டு விடுமாறு செல்வராஜை கண்டித்துள்ளார். பிரிந்து சென்று விட்டாலும் வித்யா என் மனைவிதான். அவருடன் ஏன் பழகுகிறாய்? இனிமேல் அவரிடம் பேசக்கூடாது என எச்சரித்துள்ளார்.
ஊரார் முன்னிலையில் செல்வம் தன்னைப் பார்த்து எச்சரிக்கை செய்ததால் செல்வராஜ் அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார். இந்நிலையில், செப். 20ம் தேதி மாலை, வீரகனூர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு செருப்புக் கடையில் அமர்ந்து செல்வம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த செல்வராஜ், திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து செல்வத்தின் தலையில் வெட்டியுள்ளார். அதை தடுக்க முயன்றபோது இரு கைகளிலும் பலத்த வெட்டு விழுந்தது.
இதில் கை மணிக்கட்டில் வெட்டு விழுந்து, கை துண்டானது. ரத்த வெள்ளத்தில் செல்வம் சரிந்து விழுந்தார். அக்கம்பக்கத்து கடைக்காரர்கள், பொதுமக்கள் நிகழ்விடத்தில் கூடிவிட்டதால் செல்வராஜ், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். குற்றுயிரும் குலையுயிருமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த செல்வத்தை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஒருவரும் முன் வரவில்லை.
இதுகுறித்த தகவலின்பேரில், வீரகனூர் எஸ்.ஐ. அந்தோணி மைக்கேல் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். அங்கு கூடியிருந்தவர்களிடம் வாகனம் ஏற்பாடு செய்து தரும்படி காவல்துறையினர் கேட்டும் யாரும் உதவி செய்யவில்லை. இதையடுத்து எஸ்.ஐ. அந்தோணி மைக்கேல் தனக்குச் சொந்தமான காரை வரவழைத்து, அதில் செல்வத்தை தூக்கிப் போட்டுக்கொண்டு வீரகனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்.
அப்போது அங்கு செவிலியர்கள் இருவர் மட்டுமே பணியில் இருந்தனர். அவர்கள் ரத்தக்களறியாக கிடந்த செல்வத்தைப் பார்த்ததும் பதற்றத்தில் மயங்கி விழுந்தனர். காவல்துறையினர், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஷியாம் சுந்தர், சுபாஷ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அவர்கள் செல்வத்திற்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே, தப்பி ஓடிய செல்வராஜை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். டி.எஸ்.பி. நாகராஜன் மற்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் வீரகனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.