One passed away near Dharmapuri Police investigation

Advertisment

தர்மபுரி அருகே, மகன் மீது இருந்த ஆத்திரத்தில் அவருடைய தந்தையை இரும்புக்கம்பியால் குத்திக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிட்லகாரம்பட்டியைச் சேர்ந்தவர் முனுசாமி (62). புளி வியாபாரி. இவருக்கு திருமணமாகி மனைவி, மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் ஒரு மகனைத் தவிர மற்றவர்களுக்கு திருமணமாகி தனி குடித்தனம் சென்றுவிட்டனர். முனுசாமியின் இரண்டாவது மகன் குணசேகரன், வீட்டின் அருகே கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த செல்வம் மகன் ரஞ்சித்(22) என்பவர், கடந்த சில நாட்களாகதன் வீட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது சிமெண்ட், ஜல்லி கலவை ஆகியவை குணசேகரன் நடத்தி வந்த கோழி இறைச்சிக் கடையின் மேற்கூரை மீது விழுந்து விட்டது. இதில் மேற்கூரை சிறிது சேதம் அடைந்துள்ளது. இதனால் மார்ச் 15ம் தேதி மதியம் ரஞ்சித்துக்கும் குணசேகரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆபாசமாகப் பேசிக் கொண்டதை அடுத்து,அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனாலும் கடும் ஆத்திரத்தில் இருந்த ரஞ்சித், சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் குணசேகரன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் முனுசாமி மட்டும் இருந்தார்.

Advertisment

ரஞ்சித் மீது இருந்த ஆத்திரத்தில் அவருடைய தந்தை முனுசாமியை இரும்பு கம்பியால் சரமாரியாக குத்திவிட்டு அவருடைய வீட்டுக்குச் சென்று பதுங்கி விட்டார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த முனுசாமி, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த குணசேகரன், தந்தை கொல்லப்பட்டுஇருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் ரஞ்சித்தான் அவருடைய தந்தையைக் கொன்றதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து ரஞ்சித் வீட்டுக்குச் சென்ற குணசேகரன், அங்கு பதுங்கி இருந்த அவரை சரமாரியாக தாக்கினார்.

முனுசாமி கொல்லப்பட்டது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பாப்பாரப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் பலத்த காயம் அடைந்திருந்த ரஞ்சித்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்கு அதே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து ரஞ்சித், குணசேகரன் ஆகிய இருதரப்பினரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரஞ்சித் மற்றும் அவருடைய தந்தை செல்வம் ஆகியோரை கைது செய்துள்ளனர். ரஞ்சித்தை தாக்கியதாக குணசேகரனையும் கைது செய்தனர்.இந்தச் சம்பவம் சிட்லகாரம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.