One passed away in government bus collision

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த முல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. செங்கல் சூளை தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி சத்யா என்ற மனைவியும் நான்கு மற்றும் ஏழு வயதில் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் பக்கத்து ஊரான குறும்பதெரு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் செல்வதற்காகத் தனது நண்பர்களுடன் பிரபு ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேரை அழைத்துக் கொண்டு பயணித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் குறும்பதெரு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகில் செல்லும் பொழுது பேருந்தை முந்திச் செல்ல முயன்றிருக்கிறார். அப்போது, பக்கவாட்டில் பேருந்து உரசி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பிரபு தலையில் படுகாயம் அடைந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உடனிருந்த ஒருவர் படுகாயம் அடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் ஒரு நண்பர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

Advertisment

விபத்து எப்படி நிகழ்ந்தது என்று முழுமையாக அறிய இயலாத நிலையில் இதுகுறித்து ஆலங்காயம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் சம்பவம் நடந்த இடம், வாணியம்பாடி தாலுகா காவல்துறையினருக்கு உட்பட்ட எல்லைப் பகுதி எனக் கூறி எந்த போலீசாரும் வரவில்லை. அதனால், மதியம் 1 மணி அளவில் நடந்த சாலை விபத்தில்உயிரிழந்த பிரபுவின் சடலம் மாலை 4 மணி ஆகியும் நடு ரோட்டிலேயே கைவிடப்பட்டுக் கிடந்தது.

One passed away in government bus collision

இதில் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் தகவல் அறிந்து அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்க கம்பு மற்றும் தடியுடன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வாணியம்பாடி காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார்டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டு,கடைக்கு பாதுகாப்பு கொடுத்தனர்.

Advertisment

சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சிய நேரில் வந்து உரிய முறையில் விசாரணை நடத்தி அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என உயிரிழந்த பிரபுவின் உறவினர்கள் கோரிக்கை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்தியதாகக் கூறப்படும் அரசு பேருந்தைபறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்துபிரபுவின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டுக் கலைந்து சென்றனர். இருப்பினும் டாஸ்மாக் கடை தற்போது வரை அடைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.