One passed away in a dispute with youths in Trichy

திருச்சியை அடுத்த புங்கனூர் கீழத்தெருவை சேர்ந்தவர் தமிழரசன்(50). இவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இவருடைய சொந்த ஊர் திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த பூவாளுர். மனைவியின் சொந்த ஊரான புங்கனூரில் வசித்து வந்த இவர்களுக்கு பிரசாந்த் (27) என்ற மகன் உள்ளார். பிரசாந்த் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். இவர்களது உறவினர்களான புங்கனூர் மேலத்தெருவை சேர்ந்த முத்துவீரன் மகன்கள் சரத்குமார்(26), ரஞ்சித்(24) ஆகியோரும் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் புங்கனூர் அல்லித்துறை மெயின் ரோட்டில் உள்ள டீக்கடை முன்பு பிரசாந்த்தும்தமிழரசனும் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த சரத்குமார், ரஞ்சித் ஆகிய இருவரும் பிரசாந்தை பார்த்து நீ என்ன ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறாய்? ஆட்டுக்குட்டி போன்று உனது மாடு உள்ளது. உனது மாட்டை அடக்கி விடுவோம் என்று கூறியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட பிரசாந்தை சகோதரர்கள் இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்க வந்துள்ளனர். இதனை தமிழரசன் தடுத்தார். அப்போது அவரது நெஞ்சுப் பகுதியில் பலத்த அடி விழுந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

இதில் மயங்கி விழுந்த அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில், சோமரசம்பேட்டை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சரத்குமார், ரஞ்சித் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.