திருமணத்தை மீறிய உறவு விவகாரம்; கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

One more person arrested in salem youth case

சேலம் அருகே, வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள திருமலைகிரியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். பெரிய புத்தூரைச் சேர்ந்தவர் அரவிந்த். அங்குள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து வந்தார். மனோஜ்குமார் வீட்டிற்கு நட்பு முறையில் அரவிந்த் அடிக்கடி சென்று வந்தார். இதில், அவருடைய மனைவியுடன் அரவிந்த்துக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது.

இதையறிந்த மனோஜ்குமார், தன் மனைவி மற்றும் நண்பனை கண்டித்துள்ளார். ஆனால் அதன்பிறகும் அவர்கள் ரகசியமாக சந்தித்துப் பேசி வந்துள்ளனர். இதையடுத்து மனோஜ்குமார், பெரியபுத்தூரில் உள்ள தனது நண்பர்கள் கவுரிசங்கர், ராமச்சந்திரன், ரத்தினம், கார்த்தி, ராமசாமி ஆகியோருடன் சேர்ந்து கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி அரவிந்த்தை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். பலத்த காயம் அடைந்த அரவிந்த்தை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர் மனோஜ்குமார், கவுரிசங்கர், ராமச்சந்திரன், ரத்தினம், கார்த்திக் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ராமசாமியை தேடி வந்தனர். இந்நிலையில் ஆக. 7ம் தேதி அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

arrested police Salem
இதையும் படியுங்கள்
Subscribe