ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி தனது மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
மேலும் இவ்வழக்கில் தானே நேரில் ஆஜராகி வாதாட அனுமதி கேட்டிருந்தார். இந்நிலையில் ஜீலை 5-ம் தேதி நேரில் ஆஜராகலாம் என கடந்த 25-ம் தேதி நீதிபதி அனுமதியளித்திருந்தார். இதையடுத்து இன்று வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.
நளினிக்கு 6 மாதம் பரோல் வழங்க தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து ஒரு முறைக்கு 30 நாட்கள்தான் பரோல் வழங்கமுடியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.இதனையடுத்து ஊடங்களை சந்திக்க கூடாது போன்ற நிபந்தனைகளுடன் அவருக்கு ஒரு மாதம்(30)நாட்கள் பரோல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.