
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கீழே கிடந்த ஒரு இலட்சம் ரூபாய் பணத்தைக் காவல்துறையிடம் ஒப்படைத்த டூவிலர் மெக்கானிக் அழகர்சாமிக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மனோ விஜயசங்கர் என்பவர், தனது தாயை மணப்பாறைக்கு அனுப்புவதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, தான் வைத்திருந்த ரூ. 1 லட்சத்தை தவறவிட்டுள்ளார். ஆனால், அதனைக் கவனிக்காமல் அவர் தனது தாயை மணப்பாறை பேருந்தில் ஏற்றிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். அதேசமயம், மணப்பாறையிலிருந்து திருச்சி வந்து இறங்கிய ஆலம்பட்டியைச் சேர்ந்த டூவிலர் மெக்கானிக் அழகர்சாமி, கீழே கவரில் பணம் கட்டாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து, அந்த கவரை எடுத்த அவர், நேராக திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்குச் சென்று அந்தப் பணத்தை ஒப்படைத்தார். அதேநேரம், தன் பணத்தைக் காணோம் என வழக்கறிஞர் மனோ விஜயசங்கர் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தார். அப்போது, அவரிடம் விசாரணை மேற்கொண்ட காவலர்கள், அழகர்சாமி திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எடுத்துவந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பணத்தை மனோ விஜயசங்கரின் பணம்தான் என உறுதி செய்து அவரிடம் ஒப்படைத்தனர்.
இந்தச் சமபவம் தொடர்பாக, திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் வேல்முருகன், எஸ்.ஐ. ராஜி உள்ளிட்ட போலீசார், அழகர்சாமிக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.