
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ளது நதியனூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் 52 வயது விவசாயி திருஞானம். இவர் நேற்று (05.09.2021) தனது குடும்ப செலவிற்காக தனது குடும்பத்தினரிடம் இருந்த தங்க நகைகளை வாங்கிச் சென்று திருமானூரில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்து, ஒரு லட்சத்து 40 ஆயிரம் பணத்தைப் பெற்றுள்ளார். விவசாயி திருஞானம் அந்தப் பணத்தை ஒரு பையில் வைத்து தனது இருசக்கர வாகனத்தில் மாட்டிக்கொண்டு தனது ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தார். செல்லும் வழியில் ஏலாக்குறிச்சி என்ற ஊரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்குப் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
அப்படி அவர் செல்லும்போது அவரைப் பின்தொடர்ந்து மூன்று நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்கள் திருஞானத்திடம், “நீங்கள் வந்த வழியில் நூத்தி ஐம்பது ரூபாய் பணம் கீழே கிடக்கிறது. அது உங்கள் பணமா”என்று கேட்டுள்ளனர். அப்போது சிவஞானம் வண்டியை நிறுத்தி வண்டியில் இருந்தபடியே, தனது பாக்கெட்டில் வைத்துள்ள சில்லரை பணம் கீழே விழுந்துவிட்டதா, சட்டைப்பையில் இருக்கிறதா? என்று பார்ப்பதற்குள் அந்த மூவரும் அவர் பணப்பையைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் மாயமாய் மறைந்துவிட்டனர். விவசாயி திருஞானத்தின் கவனத்தை திசை திருப்பி அந்த மூன்று நபர்களும் திட்டமிட்டு பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதைக் கண்டு பதறிப்போன விவசாயி திருஞானம், சில நிமிடங்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றார்.
அவ்வழியே வாகனத்தில் வந்தவர்கள் அவரிடம் நடந்ததை விசாரித்து அதிர்ச்சியில் இருந்த அவருக்கு ஆறுதல் கூறி, அவரை சுயநினைவுக்கு கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில் திருமானூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளார். அங்கிருந்து விரைந்து வந்த போலீசார், ஏலாக்குறிச்சியில் உள்ள பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், அந்த மூன்று நபர்கள் திருஞானத்தை பின்தொடர்ந்து வந்து அவரது கவனத்தை திசை திருப்பி பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து விவசாயியிடம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற அந்த மூவரையும் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அரியலூர் திருமானூர் பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)