One house damage police searching for four youths

Advertisment

திருச்சி மாவட்டம், தாளக்குடி பகுதியில் உள்ள ஒரு தெருவில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் சிலர் அங்கிருந்து வீட்டின் மீது நாட்டு வெடி குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வெளியே வந்தபோது, வெடிகுண்டு வீசிய வாலிபர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு வீட்டின் மேற்கூரை உடைந்து விழுந்துள்ளது. ஆனால், அங்கு யாரும் இல்லாததால் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் இந்தச் சம்பவம் குறித்து திருச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்துவந்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஹரி, சபரி, மணி உள்ளிட்ட இளைஞர்கள் அங்குள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி இருக்கின்றனர். அப்போது, மைதானத்திற்கு அருகே உள்ள புதரில் பிரதீஷ், சிவகுரு, ராகுல் ஆகிய வாலிபர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தி இருக்கின்றனர். அதனை அப்போது விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் கண்டித்துள்ளனர். இதில் அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ராகுல், பரந்தாமன், ரோஹித், பிரசாத் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் நேற்றிரவு மூன்று இருசக்கர வாகனத்தில் வந்து ஹரி, கோபி, மணி ஆகியோர் வசிக்கும் தெருவில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில் ஒரு வீட்டின் மேற்கூரை சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியுள்ளது. மேலும் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணைகண்காணிப்பாளர் சுப்பையா விசாரணை மேற்கொண்டார். மேலும் நாட்டு வெடிகுண்டுகளை வீசிய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடிவருகின்றனர். இதில் பரந்தாமன் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.