Skip to main content

மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்!

Published on 18/06/2019 | Edited on 18/06/2019


மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 85 வயது  முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். முதியவரின் இறப்பிற்கு காரணம் மருத்துவமனை நிர்வாகம்தான் என்று கூறி அவருடைய உறவினர்கள் மருத்துவர்கள் மீது   தாக்குதலை நடத்தியதாகவும்,  இந்த தாக்குதலுக்கு ஆளான இரண்டு மருத்துவர்கள் உயிருக்குபோராடிய நிலையில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. 

 One day strike for against doctors and medical staff members attacked


இந்த சம்பவத்தைக் கண்டித்து தேசிய அளவில் இந்திய மருத்துவ சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் அறிவித்தனர். இதனால் ஜூன் 17 காலை 6 மணி முதல் ஜூன் 18 காலை 6 மணி வரை இன்று  ஒருநாள்  மட்டும் அனைத்து புறநோயாளிகள் பிரிவு செயல்படாது என்றும், அவசர பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்திருந்தனர்.

இதுகுறித்து புதுக்கோட்டையில் மருத்துவர்கள் கூறும் போது.. மருத்துவமனைகள், மருத்துவர்களுக்கும், மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறி ஆகிவிட்டது. மருத்துவ மையங்களையும், மருத்துவ ஊழியர்களையும் பாதுகாக்க தேசிய அளவில் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.

இந்த நேரத்தில் இந்திய அளவில் மருத்துவ அமைப்புகளுக்கான பாதுகாப்பு முறைகள் வகுக்கப் படவேண்டும். மருத்துவ மையங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக  அறிவிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பை அந்தந்த மாநில அரசுகள் ஏற்க வேண்டும். இந்த மாதிரியான வன்முறைகள் தொடர்ந்தால் மருத்துவ ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்றனர்.

இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள், தனியார்  மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் இணைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் தர்ணாபோராட்டம் நடத்தினார்கள். இதில் இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளையின் தலைவர் மருத்துவர் சுரேஷ்குமார்  மற்றும்  செயலாளர் மருத்துவர்  கே.எச். சலீம்  மற்றும் அரசு மருத்துவ சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஏராளமான தனியார் மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தனியார் ஆய்வகங்கள், பல்மருத்துவம் மற்றும் பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.