One day CBCID for school administrators, teachers. Police!

கடந்த ஜூலை 13- ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக, 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகிகள் இரண்டு பேரும், பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

Advertisment

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தரப்பில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (27/07/2022) மீண்டும் நீதிபதி புஷ்பராணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்று ஆசிரியைகள் மற்றும் இரண்டு பள்ளி நிர்வாகிகள் பள்ளி நிர்வாகிகள் வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அவர்களை 15 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கோரப்பட்டது.

இதையடுத்து, பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அவர்களை நாளை (28/07/2022) நண்பகல் 12.00 மணிக்குமீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.