Skip to main content

அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
One crore cash seized from AIADMK leader's house

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19 ஆம் தேதி முதல்கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் அறிவித்த நாளில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடியும் நாள் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். இந்த நிலையில் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் மற்றும் அதிக எண்ணிக்கையில் பரிசு பொருட்கள் எடுத்து செல்ல கூடாது என தேசிய நெடுஞ்சாலை, மாநகரின் முக்கிய பகுதிகள், மாவட்ட எல்லையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு பகலாக சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எட்டரை பகுதிக்கு விரைந்தனர்.அங்கே அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டில் பணம் இருப்பதாக தகவல் வந்தது. வீட்டிற்குள் புகுந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது ஒரு பையில் ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது.

இதனை‌ அடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் தகவல் கொடுத்து  வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். தற்பொழுது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த அரசியல் பிரமுகர் அதிமுகவை சேர்ந்தவர். எட்டரை ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எட்டரை ஊராட்சி மன்ற தலைவர் திவ்யாவின் கணவர் அன்பரசன் அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எதற்காக ஒரு கோடி ரூபாய் இவர் வீட்டில் வைத்துள்ளார்? தேர்தல் பணம் பட்டுவாடா செய்ய இருந்த பணமா? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், அன்பரசன் வீட்டில் நடக்கும் வருமான வரித்துறை சோதனையைத் தெரிந்து கொண்ட கட்சியின் வழக்கறிஞர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் அன்பரசன் வீட்டின் முன்பு கூடினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

சார்ந்த செய்திகள்