One arrested in trichy who violated court order

Advertisment

திருச்சி மாநகரம் கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சரித்திரப்பதிவேடு ரவுடி மாரிமுத்து(36). இவர், பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, கோட்டை காவல்நிலைய ஆய்வாளரின் பிணையப்பட்ட அறிக்கையின்படி ரவுடியை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டார். அப்போது, ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கமாட்டேன், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மாரிமுத்து தாக்கல் செய்துள்ளார்.

ஆனால், மாரிமுத்து நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின்பு, நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஆபாசமாக பேசி, மது பாட்டிலால் தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய செயல்களில் ஈடுபட்டுவந்தார். இது தொடர்பாக மாரிமுத்து மீது கோட்டை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும், நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதில், மாரிமுத்து தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்றச்செயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 334 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை தொடர்ந்து மாரிமுத்து உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.