One arrested for fake government work and another for absconding

ஈரோடு கொல்லம்பாளையத்தில் ரயில்வே காலனி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் கடந்த 1 -ஆம் தேதி ஈரோடு மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒரு நபர் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தன்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி நியமித்துள்ளதாகக் கூறி, பணி ஆணையைக் கொடுத்துள்ளார். அது போலியான பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், காவல்துறை எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

Advertisment

தொடர்ந்து, மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் ஈரோடு அவல்பூந்துறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் நியமன ஆணை கொடுத்தது தெரியவந்தது.

சிவகுமார் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். சிவகுமாரை பிடித்த போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்தப் போலி நியமன ஆணைக்கு மூளையாகச் செயல்பட்டதுசிவகுமார் பணியாற்றிய பள்ளியின் பங்குதாரர் எனத் தெரியவந்தது. தற்போது அங்கு அந்தப் பங்குதாரர் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அந்தப் பங்குதாரரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். அந்தப் பங்குதாரர் கைது செய்யப்பட்ட பிறகுதான், இந்தப் போலி நியமன ஆணையில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, அவர்கள் யார் யாருக்கெல்லாம் அரசுப் பணி வழங்கியிருக்கிறார்கள் எனத் தெரியவரும்.