Skip to main content

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கம்; பயணிகள் மகிழ்ச்சி!

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Omni buses operate from Coimbatore; Travelers rejoice

சென்னை கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது. இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார்.

இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்த போது, “கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கெனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம். போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம்.

Omni buses operate from Coimbatore; Travelers rejoice

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது” என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கோயம்பேட்டில் இருந்து நேற்று (10.02.2024) இரவு முதல் மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதை பயணிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

விமான கட்டணம் கிடுகிடு உயர்வு; பயணிகள் கடும் அதிர்ச்சி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Air fares hike Passengers shocked

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் வார விடுமுறை காரணமாகப் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் சேலம் செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 முதல் 5 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இதனால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த வகையில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 957 ரூபாயாக இருந்த விமான கட்டணம் தற்போது 12 ஆயிரத்து 716 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 674 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 555 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக 11 ஆயிரத்து 531 ரூபாயாக உள்ளது. மேலும் சென்னையிலிருந்து சேலம் செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 433 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 5 ஆயிரத்து 572 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 616 ரூபாயாக உயர்ந்துள்ளது.