Skip to main content

கொள்ளை லாபம் அடித்து வரும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்... கே.எஸ்.அழகிரி கண்டனம்

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி, பொங்கல், நவராத்திரி போன்ற பண்டிகை காலங்களில் தமிழக மக்கள் பயணங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசு பேருந்துகளை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருக்கிறார். அந்த பேருந்துகளில் இடவசதி இல்லாத காரணத்தால் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தி வசூலிக்கிறார்கள். 

 

bus



ஏறத்தாழ சென்னை மாநகரில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. சராசரியாக பேருந்து கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அக்டோபர் 23 ஆம் தேதி வசூலிக்கப்படுகிற கட்டணத்தை விட, அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை தீபாவளி பண்டிகைக்காக பயணம் மேற்கொள்பவர்கள் பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. குறிப்பாக சென்னையிலிருந்து சேலத்திற்கு குளிர்சாதன வசதி இல்லாத, படுக்கை வசதி கொண்ட பயணத்திற்கு புதன்கிழமை அன்று ரூ.500 வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதே பயணத்தை வெள்ளிக்கிழமை மேற்கொள்பவர்களுக்கு ரூ.1570 வசூலிக்கப்படுகிறது. இது 214 சதவீதம் அதிகமாகும். 


 

 

அதேபோல, ஒவ்வொரு ஊருக்கும் இத்தகைய கட்டண வேறுபாடுகளுடன் பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டண வசூல்கள் ஒளிவு மறைவு இல்லாமல் பகிரங்கமாக இணைய தளத்தில் முன்பதிவு செய்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டணக் கொள்ளை குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத்துறை கண்டும் காணாமல் இருப்பது ஏன் ? பண்டிகை காலங்களில் வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள் இத்தகைய கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலையை, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடித்து வருகிறார்கள். இத்தகைய கொள்ளை லாபத்தை தடுத்து நிறுத்த வேண்டிய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் பின்னணி என்ன ? இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. 


 

 

ஆனால், தமிழகத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் இங்கே பதிவு செய்யப்படாமல் நாகாலாந்து, அருணாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கே பதிவு செய்யப்படுவதால் சாலை வரி வருடத்திற்கு ரூபாய் 18 ஆயிரம் தான் செலுத்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மாதத்திற்கு ஒரு பேருந்திற்கு சாலை வரியாக ரூபாய் 54 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இத்தகைய சலுகைகளை அனுபவிப்பதற்கு தமிழக அரசின் போக்குவரத்துத்துறை உடந்தையாக இருப்பது ஏன் ? வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளை தமிழகத்தில் அனுமதிப்பது ஏன் ? 

 

ks azhagiri


 

தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி இத்தகைய ஆம்னி பேருந்துகள் மீது பல்வேறு வழிகளில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க முடியும். வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளை இயக்குவதற்கு தமிழகத்தில் தடை விதிக்கலாம். அத்தகைய தடை விதிக்கப்படுவதோடு, ஆம்னி பேருந்துகள் வசூலிக்கின்ற கட்டணத்தையும் நெறிமுறைப்படுத்தலாம். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை ஆம்னி பேருந்துகள் எந்தவித கட்டுப்பாடோ, ஒழுங்குமுறையோ இல்லாமல் தன்னிச்சையாக தங்களது விருப்பம் போல் பேருந்துகளை இயக்கி வருகிறார்கள். இதற்கு காரணம் அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு தான். இத்தகைய ஒத்துழைப்பிற்காக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒரு பெரும் தொகையை நன்கொடையாக ஆளுங்கட்சிக்கு வழங்குவதாக கூறப்படுகிறது. அதனால் இவர்கள் செய்கிற பல்வேறு அத்துமீறல்கள் மற்றும் முறைகேடுகளை கண்டும் காணாமல் இருக்கிற நிலை உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.


எனவே, தனியார் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தும் பொதுமக்களின் நலனில் தமிழக ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருக்குமேயானால், உடனடியாக ஆம்னி பேருந்துகளின் பகிரங்க கட்டணக் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்துகிற வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாற்றுத்திறனாளி சிறுவனை தனியார் பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநர்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
conductor refused to board the differently-abled son in the private bus

திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குப்தா. இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 14 வயதில் மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இவரை இன்று இவருடைய அம்மா வெண்ணிலா திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் விசமங்கலத்தில் உள்ள வீட்டிற்குச் செல்வதற்காக திருவண்ணாமலை செல்லும் தனியார் பேருந்தில் மாற்றுத்திறனாளியான மகனை ஏற்றி சீட்டில் உட்கார வைத்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளி மகனைத் தனியார் பேருந்தின் நடத்துநர் கீழே இறக்கி விட்டுள்ளார். 

ஆத்திரம் அடைந்த அவரின் தாயார் வெண்ணிலா மற்றொரு பேருந்தில் விசமங்கலம் பகுதிக்கு வந்து சாலையில் கல்லை வைத்து கையில் பெட்ரோல் கேனுடன் திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

conductor refused to board the differently-abled son in the private bus

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆய்வாளர் ரேகா மதி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

நேருக்கு நேர் பேருந்துகள் மோதி விபத்து; 18 பேர் படுகாயம்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Head-on collision of buses; 18 people were injured

ஈரோடு அருகே தனியார் பேருந்தும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதால் 18க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் அதேபோல் நடுப்பாளையத்தில் இருந்து ஈரோடு பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்தும் சோலார் புதூர் என்ற பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் இரண்டு பேருந்து ஓட்டுநர்கள், பயணிகள் என மொத்தம் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ்கள் கொண்டுவரப்பட்டது. ஈரோடு அக்கரகாரம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஆம்புலன்ஸ்கள் மூலமாக காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த மொடக்குறிச்சி போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.