ஆம்னி பேருந்துகள் இயங்குமா? இயங்காதா? - அடுத்தடுத்த அறிவிப்புகளால் மக்கள் குழப்பம்

Omni Bus Owners Association has announced that all Omni buses will operate

தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், தற்போது வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும் என மற்றொரு சங்கம் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

வார விடுமுறை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். விடுமுறையின் தொடக்கத்தில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டண வசூல் செய்ததாக கூறி 120 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த 120 ஆம்னி பேருந்துகளையும் விடுவிக்கக் கோரியும், ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும், பயணிகளை பாதிக்காத வகையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கூறி இந்த அறிவிப்பை தென் மாநில பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

விடுமுறை முடிந்து ஊர் திரும்ப உள்ள பயணிகள் இன்று ஆயத்தமாகி வரும் நிலையில், தற்போது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து வைத்துள்ளதாகவும், இந்த அறிவிப்பால் தற்போது அவர்கள் பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் செயலாளர் மாறன் செய்தியாளர்களை சந்தித்தபோது, “எங்கள் சங்கத்தில் 1,500 பேருந்துகள் உள்ளன; அவை அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். எங்கள் சங்கத்தில் தான் அதிக பேருந்துகள் இருக்கிறது. பொதுமக்கள் பயப்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

ஆனால் தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்புஸ்டிரைக் அறிவித்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்வழக்கம் போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என தெரிவித்துள்ளது. இப்படி இரு சங்கங்கள் மாற்றி மாற்றி கூறுவதால் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

Tamilnadu Transport
இதையும் படியுங்கள்
Subscribe