ADVERTISEMENT

ஒமிக்ரான் பீதி...! தீவிர கண்காணிப்பில் வெளிநாட்டிலிருந்து ஈரோடு வந்த 13 பேர்! 

06:10 PM Dec 03, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தொற்று அடிக்கடி உருமாற்றம் அடைந்து கூடுதலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் கரோனா தாக்கம் தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தமிழகத்திலும் கரோனா தாக்கம் குறைந்துள்ளது. தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதால் கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி உட்பட 23-க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கரோனா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் தொற்று விரைவாக பரவக்கூடியது என்றும், நோய் எதிர்ப்பை எளிதில் தவிர்க்க கூடிய தன்மை உடையது என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து ஒவ்வொரு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் மாநில சுகாதாரத் துறையினர் உஷார்படுத்தி உள்ளனர். குறிப்பாக விமான நிலையங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனை செய்து அவர்களுக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்தாலும் அவர்களை வீடுகளில் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தி மீண்டும் பரிசோதனை செய்து நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டுமே அவர்கள் வெளியே நடமாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 3ந் தேதி ஒரே நாளில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 13 பேர் அந்தந்த விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்ற முடிவுடன் அவரவர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். எனினும் அவர்கள் ஒரு வாரத்திற்கு வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுடன் தொடர்பு இருப்பவர்களும் ஒரு வாரத்திற்கு வெளியே வரவேண்டாம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் தினமும் சுகாதாரத்துறை சார்பில் பணியாளர்கள் சென்று கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, "ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தி அவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் ஒரே நாளில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 13 பேர் விமானம் மூலம் வந்துள்ளனர். அவர்கள் தங்கள் வீடுகளில் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கி இருக்கும் பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள், அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.

அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர். ஒரு வாரம் கழிந்ததும் மீண்டும் அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் அவர்களுக்கு பாதிப்பில்லை என்று முடிவு வந்தால் மட்டுமே அவர்கள் வெளியே நடமாடலாம். பாதிப்பு என்று முடிவு வந்தால் உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுவர். மேலும் அவர்களுக்கு எந்த வகையான வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக அவர்களது சளி, ரத்த மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்" என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT