Skip to main content

1200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் கட்டிய ஏரி கண்டுபிடிப்பு!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

தமிழகத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் ஏராளமான அதிசயங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. அப்படித்தான் இதுவும். 

 

oldest lake invention in erode

 

 

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிரம்மதேசம் கிராமம் கல்லாம்பாறை பகுதியில் கல்வெட்டு ஆய்வாளர்கள் புலவர். ராசு, சக்திபிரகாஷ், வேலுதரன் ஆகியோர் கல்வெட்டு தொடர்பாக ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில்,ஒரு ஓடைக்கு அருகில் கி.பி. 8-ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு ஏரி இருந்தது கல்வெட்டு மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கொங்கு மண்டலத்தின் மிகவும் பழமையான ஏரி என்பது தெரியவந்ததாக புலவர் ராசு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "கல்வெட்டில் செருக்கலி நாடாளரால் பணிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஏரி இருந்த பகுதி செருக்கலிநாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் வடகரை நாடு என்று அழைக்கப்பட்டது. இந்த நாட்டை நிர்வாகம் செய்தவர்கள் நாடாளர் எனப்பட்டனர். ஊரை ஆண்டவர் ஊராளி என அழைக்கப்பட்டதை போல, நாட்டை ஆண்டவர் நாடாளர் என்று அழைக்கப்பட்டனர். அதுவே பிற்காலத்தில் நாட்டார் எனப்பட்டனர். 

இந்த நாடாளரால் ஏரி உருவாக்கப்பட்டது. கல்வெட்டின் மூலமாக ஏரியின் பெயரை நட்டன் ஏரி என்று அழைக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. ஏரியின் கரை சிறை என்றும், ஏரியின் நீர்வெளியேறும் மதகு வாய் என்றும் கூறப்பட்டது. ஏரிபோல கரைகளுக்கு நட்டன் சிறை, மதகுகளுக்கு நட்டன் வாய் என்று அழைக்கப்பட்டது. இது சிவபெருமான் பெயர் அல்லது தனிப்பட்ட தலைவன் பெயராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஏரியின் பயனை நாடாளரின் வழியினராகிய மக்கள் பேரர் அல்லாமல், வேறு யாராவது அனுபவித்தால், அவர்கள் வம்சம் அற்றுப்போவார்கள்.

 



அதாவது நாடாளரின் வம்சத்தினர் அனுபவித்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், பேச்சு ஒலியைப்போல தலை என்பதற்கு தலைய் என்று கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. அதாவது ஏரியை பாதுகாத்தவர், அடி (கால்) எங்கள் தலைமேலது என்று கூறப்பட்டது. நீர்ப்பாசன வசதி கல்வெட்டின் தொடக்கத்தில் பல்லவர் கிரந்த எழுத்தான ஸ்ரீ என்று பொறிக்கப்பட்டுள்ளது. தொன்மையான தமிழ் எழுத்துகள் சிலவற்றில் தமிழ் பிராமி தாக்கமும், சில எழுத்துகளில் வட்டெழுத்தின் சாயலும் உள்ளன.

இதே காலத்தை சேர்ந்த ஸ்ரீ சோழிக அரையன் அகணிதன் குளம் கரூர் அருகே வெள்ளியணை என்ற ஊரில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே பிற்காலத்தில் 8 ஆறுகளில் 90 அணைகள் கட்டி நீர்ப்பாசன வசதி பெருக்கிய கொங்கு மக்களின் தொடக்க முயற்சியை இது காட்டுகிறது. இதன் விவரம் ஈரோடு மாவட்ட நிர்வாகத்துக்கும், தொல்லியல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க தொன்மையான கல்வெட்டை பாதுகாக்க வேண்டும்" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏரியில் குளிக்க முயன்ற 4 பெண்கள் உயிரிழப்பு

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
4 women lose their live while trying to bathe in the lake

கோவிலுக்குச் சென்ற நான்கு பெண்கள் ஏரியில் குளிக்கும் முற்பட்ட போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா என்பவர் அவருடைய மகள் லலிதா மற்றும் கல்லூரி மாணவி காவியா அவருடைய தங்கை ப்ரீத்தா ஆகியாருடன் சேர்ந்து வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலுக்கு சென்று வழிபாட்டை முடித்த அவர்கள் கோவிலுக்கு அருகிலேயே உள்ள வேப்பூர் ஏரியை சுற்றி பார்த்துள்ளனர்.

பின்னர் குளிப்பதற்காக ஏரியில் நான்கு பேரும் இறங்கியுள்ளனர். அப்பொழுது நால்வரில் ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று விட, அவரை மீட்க மற்ற மூன்று பேரும் முயன்றுள்ளனர். இதில் நான்கு பேரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். நீரில் சிலர் தத்தளிப்பது அந்த பகுதி மக்களுக்கு தெரிய வர, உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் நால்வரும் உயிரிழந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா ஆகிய நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

தாது பஞ்சகால ஜமீன்தார் கல்வெட்டு கண்டுபிடிப்பு‌!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
discovery of the Zamindar inscription of the Ore Pancha period

கல்லலை அடுத்த அரண்மனை சிறுவயலில் 148 ஆண்டுகள் பழமையான தாது பஞ்சகால ஜமீன்தார்  கல்வெட்டு கண்டுபிடிப்பு.

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகில் உள்ள அரண்மனை சிறுவயலில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர் கா. காளிராசா, கள ஆய்வாளர், கா. சரவணன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 148 ஆண்டுகள் பழமையான தாது பஞ்சகால ஜமீன்தார் கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா‌. காளிராசா, செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது. கல்லலை அடுத்துள்ள அரண்மனை சிறுவயல் நீர் நிலைகளும், வயல்வெளிகளும் நிறைந்த  ஊராகும். இங்குள்ள மும்முடீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும், மேலும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் அரண்மனை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் இங்குள்ள சீனக்கண்மாயில் கலுங்குமடையில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனக்கண்மாய்;

அரண்மனை சிறுவயலிலிருந்து களத்தி அய்யனார் கோவிலுக்குச் செல்லும் வழியில் தொடர்வண்டிப் பாதையை ஒட்டிய ஒரு பகுதியில் சீனக் கண்மாய் அமைந்துள்ளது. கண்மாயின் நடுவில் காணப்படும் குமிழி மடைத் தூண்களைக் கொண்டு இது பழமையான கண்மாய் என்பதை அறிய முடிகிறது.

அரண்மனை சிறுவயல் ஜமீன்தார்;

சிவகங்கைச் சீமை இராமநாதபுரத்தில் இருந்து 1729 இல் பிரிக்கப் பெற்று சசிவர்ணதேவர் அவர்களால் 1730 இல் தெப்பக்குளம், அரண்மனை மற்றும் நகரம், உருவாக்கி முறையான அமைப்பாக ஆளப்பெற்றது. 03.09.1801ல் இருந்து இஸ்திமிரிங் ஜமீன்தாராக கௌரி வல்லவருக்கு அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களால் முடி சூட்டப் பெற்று, அன்று முதல் ஜமீன்தாரி முறைக்கு சிவகங்கை வந்தது. கௌரி வல்லவர் அறந்தாங்கி காட்டில் வாழ்ந்த போது மாணிக்க ஆத்தாள் என்பவரை விரும்பி மணந்தார். இவர் வேறு சமூகத்தை சார்ந்தவர். அவர் வழிவந்த வாரிசுகளே தற்போது சிறுவயல் ஜமீன்தாராக இருந்து வருகின்றனர். இங்கிருந்த முத்துராமலிங்க ஜமீன்தார் பற்றி தமிழ்த் தாத்தா உ.வே.சா என் சரித்திரம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர்களது வாரிசுதாரர்கள் இன்றும் காளையார்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவில் ஐந்தாம் மண்டகப் படியை நடத்திவருவதோடு, காளையார் கோவில் தேரோட்டம், மற்றும் தெப்பத் திருவிழாவிற்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். கல்லல் சிவன் கோவிலிலும் எட்டாம் திருநாள் மண்டகப்படி இவர்களுடையதாக உள்ளது. இவர்கள் முன்னோர்கள் வாழ்ந்த அரண்மனை தற்போது மிகவும் இடிந்த நிலையில் இருந்தாலும் அதில் ஒரு பகுதியில் வேல், வாள், கம்பு, வளரி போன்ற ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கல்வெட்டு அமைப்பு;

சீனக் கண்மாயில் நீர் நிறைந்து வெளியேறும் கலுங்கு மடை கரைப்பகுதிகள் செம்புராங்கல்லாலும்.. நீர் வெளியேறும் இடங்கள் வெள்ளைக் கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. இதில் கரையை ஒட்டியுள்ள கட்டுமான பகுதியில் சுமார் 2.5 அடி நீளமும் ஒன்றரை அடி  அகலமும் உடையதாகக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுச் செய்தி;

உ 1876 ஆம் வருஷம் மே மாதம் எட்டாம் தேதி தாது வருஷம் சித்திரை மாதம் 28ஆம் தேதி சிவ- சப்-கட்டணூர் ஜமீன்தார் முத்து வடுகு முத்துராமலிங்க தேவர்வர்கள்.என்று எழுதப்பட்டுள்ளது. சிவ - சப் என்பது சிவகங்கை சார்பு என பொருள் படுவதாகக் கொள்ளலாம். கண்மாய்க் கல்வெட்டின் வழி கண்மாயை முத்து வடுகு என்ற முத்துராமலிங்க  ஜமீன்தார் அவர்கள் கண்மாய், மற்றும் கலுங்கை சீர் செய்தமையை அறிய முடிகிறது.

தாது பஞ்சம் காலம்;

1876 ஆம் ஆண்டு தொடங்கி 1878 வரை தாது பஞ்ச காலம் என்று சொன்னாலும் இதற்கு முன்னும் பின்னும் சேர்த்து ஏழு ஆண்டுகள் மழை இல்லாமல் மிகுந்த வறட்சியாக இருந்ததாக பெரியவர்கள் கூறுகின்றனர்.இந்த தாது பஞ்சம், மிகப்பெரிய பஞ்சமாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பஞ்ச காலத்தில் மக்கள் பட்டினியால் இலட்சக்கணக்கில் இறந்ததாகவும் தெரிகிறது. இதை சென்னை மாகாணப் பஞ்சம் என்றும் அழைக்கின்றனர். சென்னை மட்டுமல்லாது கர்நாடகா மகாராஷ்டிரா வரை இப்பஞ்சம் பரவி இருந்ததாக கூறப்படுகிறது.

தாது பஞ்சம் பற்றி பல இலக்கியங்கள் குறிப்பிட்டாலும் சிவகங்கை பகுதியில் கண்மாய்களை தூர்வாரி பராமரிப்பு பணியை செய்து இருப்பதன் மூலம் அடுத்த மழைக்கு தயாராக இருந்ததை அறிய முடிகிறது.

பஞ்ச லட்சண திருமுக விலாசம்;

சென்னை மாகாண தாது பஞ்சத்தை கருப்பொருளாகக் கொண்டு சிவகங்கை அரசவைப் புலவரும், மிராசு கணக்காளருமான பிரமனூர் வில்லியப்ப பிள்ளை பாடிய எள்ளல் சுவை மிகுந்த நூல் பஞ்சலட்சன திருமுக விலாசம் ஆகும். இந்நூலில், மதுரை சொக்கநாதரிடம் பஞ்சத்தின் பாட்டை மக்கள் முறையிட, அவரோ சிவகங்கை ஜமீன்தார் துரைசிங்கம் அவர்களிடம் முறையிட அனுப்பி வைத்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழி சிவகங்கை தாது பஞ்ச நேரத்தில் ஓரளவு செழிப்பாக இருந்ததாகவும் கருத முடிகிறது.

சிவகங்கை தொல்நடைக் குழு சில ஆண்டுகளுக்கு முன்னர், தாது பஞ்ச காலத்தில் இலங்கையில் தொழில் செய்த தனிநபர் ஒருவர், குளம் மற்றும் வரத்துக் காலை சீர் செய்து உள்ளுர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிய கல்வெட்டை சிவகங்கை அருகே உள்ள இடைய மேலூரில் கண்டுபிடித்தது, குறிப்பிடத்தக்கது.