Skip to main content

மூன்று மணி நேரம் போராடி தனது வாக்கைச் செலுத்திய மூதாட்டி..! 

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று (06/04/2021) காலை 07.00 மணியளவில் தொடங்கி மாலை 7 மணிக்கு முடிவடைந்தது. இதில் தமிழகம் முழுக்க 72.78% வாக்குகள் பதிவாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள காவேரி பள்ளி வாக்குச்சாவடிக்கு காலை 7 மணிக்கு செல்லம்மாள் எனும் 80 வயதான மூதாட்டி, தனது மகன் இசக்கி பாண்டியனுடன் வாக்களிக்க வந்திருந்தார். ஆனால் அவருக்கு அங்கு வாக்கில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அம்மூதாட்டிக்கு கிளாரன்ஸ் பள்ளியில்தான் ஓட்டு இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் அம்மூதாட்டியை அவரது மகன், அங்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்கேயும் ஓட்டு இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனால் செல்லம்மாள் மிகவும் அவதிக்குள்ளானார். 

 

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரின் மகன், இசக்கி பாண்டியன், “நாங்கள் கடந்தமுறை காவிரி தெருவில் வாக்களித்தோம் அதனால், இம்முறையும் இங்கேயே வந்தோம் ஆனால், இங்கு இல்லை, நீங்க கிளாரன்ஸ் பள்ளிக்குச் செல்லுங்கள் என்று தெரிவித்துவிட்டனர். சரியென அங்குச் சென்றோம், அங்கும் தேர்தல் அதிகாரிகள் இங்கு வாக்கில்லை என்று தெரிவித்துவிட்டனர். அதே சமயம் தற்போதைய தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சொந்தரராஜன் அங்கு இருந்தார். அவர் பார்த்துவிட்டு, ‘இந்த அம்மாவின் வாக்கு என்ன என்று பார்த்து சரி செய்யுங்கள்’ என்றார். ஆனால், அதன்பிறகும் தேர்தல் அதிகாரிகள் ‘இங்கு வாக்கில்லை, நீங்க காவேரி பள்ளிக்கே செல்லுங்கள்’ என்றனர். அதனால், அங்கிருந்து மீண்டும் இங்கு வந்தோம், மீண்டும் இவர்கள், அங்குதான் நீங்க பார்க்க வேண்டும் அங்குச் செல்லுங்கள் என்று தெரிவிக்கின்றனர். காலை 7 மணி வாக்குப்பதிவுக்கு 6.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டோம். ஆனால், இவர்கள் இப்படி அலகழித்துகொண்டிருக்கிறார்கள். இரண்டரை மணி நேரத்திற்கும் மேலக 80 வயதுக்கும் மேலான எனது தாயை இங்கும் அங்கும் மாறி மாறி அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறேன்.

 

வீட்டில் இருந்து வாக்களித்திருக்கலாமே எனத் தேர்தல் அலுவலகர்கள் தரப்பில் கேட்டனர். அரசு தரப்பிலிருந்து தபால் ஓட்டிற்காக யாரும் எங்களை அணுகவில்லை. இத்தனை அதிகாரிகள் இருக்கிறார்களே, இந்தப் பகுதியில் எத்தனை முதியவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தபால் வாக்கு வேண்டுமா என தேர்தல் ஆணைய அதிகாரிகள் வந்து கேட்க வேண்டும். ஆனால், அவர்களும் வரவில்லை. நாங்களும், அம்மா நடந்து செல்லக்கூடிய நிலையில் இருப்பதால், அதனை பொருட்படுத்தாமல் நேரில் அழைத்து வந்தால் இவ்வாறு அலையவிடுகிறார்கள். ஜனநாயக கடமையை செய்ய வந்தால் இந்த நிலைமை” என்று கவலையுடன் தெரிவித்தார். இறுதியாக அம்மூதாட்டி கிளாரன்ஸ் பள்ளியில் தனது வாக்கைச் செலுத்தினார்.   

 

 

சார்ந்த செய்திகள்