
ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி காஞ்சனா (58). இவரது மகள் மொடக்குறிச்சியில் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் காஞ்சனா நேற்று தனது மகளை பார்க்க மொடக்குறிச்சி சென்றிருந்தார். மகளை பார்த்துவிட்டு இரவு பஸ் மூலம் வீட்டுக்கு வந்தார்.
பட்டறை பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் ஹெல்மெட் அணிந்தபடி ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்துள்ளார். திடீரென அந்த நபர் காஞ்சனா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலிக்கொடியை பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட காஞ்சனா நகையை கழுத்தோடு வைத்து கையால் இறுக்கி அணைத்துக் கொண்டார். மறுபுறம் அந்த ஹெல்மெட் கொள்ளையன் காஞ்சனா கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை பிடித்து இழுத்தான். இதில் ஒரு பவுன் மட்டும் கொள்ளையன் கையில் சிக்கியது. பின்னர் அந்த ஒரு பவுனுடன் அந்த கொள்ளையன் அங்கிருந்து தப்பி சென்றார். கொள்ளையுடன் போராடி 3 பவுன் நகையை மூதாட்டி மீட்டார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.